ரூ.2.88 லட்சம் கோடி பொருளாதார நடவடிக்கை: அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் ஒப்புதல்
ரூ.2.88 லட்சம் கோடி பொருளாதார நடவடிக்கை: அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் ஒப்புதல்
ரூ.2.88 லட்சம் கோடி பொருளாதார நடவடிக்கை: அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் ஒப்புதல்
UPDATED : ஜூன் 21, 2024 06:12 AM
ADDED : ஜூன் 21, 2024 12:55 AM

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில், 14 காரிப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, வாரணாசி விமான நிலைய விரிவாக்கம் உட்பட 2.88 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவி ஏற்றபின், முதல் அமைச்சரவை குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
நெல் உட்பட, 14 காரிப் கால பயிர்களுக்கு, 2024 - 25ம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுஉள்ளது.
குவின்டாலுக்கு 117 ரூபாய் முதல் 983 ரூபாய் வரை விலை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பலன் கிடைக்கும். இந்த விலை உயர்வு, பண வீக்க விகிதங்களை பாதிக்காது என்றும் அரசு தெரிவித்து உள்ளது.
விமான நிலைய விரிவாக்கம்: உத்தர பிரதேசத்தின் வாரணாசி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு 2,800 கோடி ரூபாய் முதலீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதிய முனையம், ஓடுதளம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. பயணியர் வந்து செல்லும் திறன், ஆண்டுக்கு 39 லட்சத்தில் இருந்து, 1 கோடியாக உயர்த்தவும் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன.
புதிய துறைமுகம்: மஹாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் உள்ள வாத்வானில், புதிய துறைமுக கட்டுமானத்துக்கு 76,220 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி: கடல் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கு 7,453 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 6,853 கோடி ரூபாய் நிதி, 1 கிகாவாட் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தவும், 600 கோடி ரூபாய் துறைமுக மேம்பாட்டுக்கும் செலவிடப்பட உள்ளது.
தடயவியல் மேம்பாடு: புதிய குற்றவியல் சட்டங்களை செயல்படுத்த ஆதரவு அளிக்கும் நோக்கத்தில், தேசிய தடயவியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் கீழ், 2024 - 25 முதல் 2028 - 29 வரையிலான காலகட்டத்தில், தடயவியல் துறையை மேம்படுத்தும் பணிகளுக்காக 2,254 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை: மருத்து, ஸ்டீல், தகவல் தொடர்பு, ஜவுளி, உணவு பொருட்கள் உட்பட 10 துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்துக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கேபினட் குழுவின் இந்த முதல் கூட்டத்தில், மொத்தம் 2.88 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.