Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 10 ஆண்டுகளில் 2,639 மீனவர்கள் பாகிஸ்தானில் இருந்து விடுவிப்பு

10 ஆண்டுகளில் 2,639 மீனவர்கள் பாகிஸ்தானில் இருந்து விடுவிப்பு

10 ஆண்டுகளில் 2,639 மீனவர்கள் பாகிஸ்தானில் இருந்து விடுவிப்பு

10 ஆண்டுகளில் 2,639 மீனவர்கள் பாகிஸ்தானில் இருந்து விடுவிப்பு

ADDED : ஜூலை 02, 2024 01:37 AM


Google News
புதுடில்லி, 'மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில், பாகிஸ்தான் சிறையில் இருந்து 2,639 மீனவர்களும், 71 சிறை கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்' என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துாதரக அணுகல் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா மற்றும் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள அந்தந்த நாட்டினரின் விபரங்கள் ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ம் தேதிகளில் இரு நாடுகளும் பரிமாறிக் கொள்வது வழக்கம்.

கடந்த 2008 முதல் நடைமுறையில் உள்ள இந்த வழக்கத்தின்படி, இரு நாட்டு பிரதிநிதி களும் அது தொடர்பான விபரங்களை நேற்று பரிமாறிக் கொண்டனர்.

டில்லி மற்றும் இஸ்லாமாபாதில் உள்ள இரு நாட்டு துாதரகங்கள் வாயிலாக நடந்த இந்த தகவல் பரிமாற்றத்தின் போது, பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களை விரைவில் விடுவிக்கும்படி வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா - பாக்., சிறைகளில் உள்ள அந்தந்த நாட்டினர் குறித்த விபரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பாகிஸ்தானில், 211 இந்திய மீனவர்கள் மற்றும் 43 பொதுமக்கள் சிறையில் உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல், நம் நாட்டில் 366 பொதுமக்களும், 86 மீனவர்களும் சிறையில் உள்ளது அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

தண்டனை முடிந்து சிறையில் உள்ள 185 இந்தியர்களை விரைவில் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசின் தீவிர முயற்சியால், கடந்த 10 ஆண்டுகளில் 2,639 இந்திய மீனவர்களும், 71 பொதுமக்களும், பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த ஓராண்டில் மட்டும் இதுவரை 491 பேர் அந்நாட்டு சிறையில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us