மோசடியாக கம்போடியா அழைத்து செல்லப்பட்ட 14 இந்தியர்கள் மீட்பு
மோசடியாக கம்போடியா அழைத்து செல்லப்பட்ட 14 இந்தியர்கள் மீட்பு
மோசடியாக கம்போடியா அழைத்து செல்லப்பட்ட 14 இந்தியர்கள் மீட்பு
ADDED : ஜூலை 21, 2024 06:30 AM

பினாம் பென் : வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, கம்போடியா அழைத்துச் செல்லப்பட்டு, வலுக்கட்டாயமாக சைபர் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட 14 இந்தியர்களை, அந்நாட்டு போலீசார் மீட்டனர்.
போலி வேலைவாய்ப்புகளை நம்பி, அனுமதியற்ற ஏஜன்டுகள் வாயிலாக நாடு முழுதும் இருந்து பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். சில மாதங்களுக்கு முன், இதுபோல் மோசடியாக ஆசிய நாடான கம்போடியாவுக்கு ஏராளமான இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து நம் வெளியுறவு அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்ததும், விசாரிக்கும்படி கம்போடியா போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
'கால் சென்டர்'களில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக இந்தியர்களை ஏமாற்றி, மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் கம்போடியாவுக்கு அழைத்து செல்கின்றனர்.
இதை நம்பி கம்போடியா செல்லும் இந்தியர்களிடம், அந்த மோசடி கும்பல் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொள்கிறது. பின், அவர்களை கட்டாயப்படுத்தி, 'சைபர்' குற்றங்களில் சட்டவிரோதமாக ஈடுபடுத்துகிறது.
குறிப்பாக, இந்தியர்களை குறிவைத்து தான் இந்த மோசடிகள் நடக்கின்றன. இதனால், அந்த மோசடிக்கு இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களையே பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஆண்டு, மத்திய அரசு ஊழியர் ஒருவர் இந்த மோசடியில் சிக்கி, 67 லட்சம் ரூபாய் ஏமாந்தார். அவர் அளித்த புகார் குறித்த விசாரணையில், கம்போடியாவில் நடக்கும் மோசடி அம்பலத்துக்கு வந்தது.
இந்நிலையில், கம்போடியாவில் சமீபத்தில் அந்நாட்டு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கொத்தடிமை போல் பல ஆண்டுகளாக சைபர் கிரைம் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட 14 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலானோர் உத்தர பிரதேசம் மற்றும் பீஹாரைச் சேர்ந்தவர்கள். தற்போது கம்போடியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள், இந்தியா திரும்ப உதவும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்போடியாவில் இது போல் 5,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக கூறியுள்ள வெளியுறவு அமைச்சகம், முதற்கட்டமாக இதுவரை 250 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை மீட்கும் பணி துரிதகதியில் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.