நாடு முழுதும் வெப்ப அலைக்கு இதுவரை 61 பேர் பலி
நாடு முழுதும் வெப்ப அலைக்கு இதுவரை 61 பேர் பலி
நாடு முழுதும் வெப்ப அலைக்கு இதுவரை 61 பேர் பலி
ADDED : ஜூன் 01, 2024 01:37 AM

புதுடில்லி : நாடு முழுதும் கடுமையான வெப்ப அலை காரணமாக, இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் நேற்று தேர்தல் பணியில் ஈடுபட்ட ஏழு பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவது, மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
நம் நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. தமிழகம், டில்லி, பஞ்சாப், ஹரியானா, ஒடிசா என, பல்வேறு மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மழைக்கு குடை பிடித்த காலம் சென்று, தற்போது வெயிலுக்கு குடை பிடிக்கும் நிலை வந்து விட்டது.
கோடை வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்க, பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. காலி குடங்களுடன் ஆங்காங்கே மக்கள் போராட்டம் நடத்துவதையும் பார்க்க முடிகிறது. மேலும், மின் வெட்டும் ஏற்படுகிறது.
மயக்கம்
இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கடுமையான வெப்ப அலைக்கு இதுவரை, 61 பேர் உயிரிழந்துள்ளனர். உ.பி.,யின் மிர்சாபூரில் நேற்று லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்ட 23 பாதுகாப்பு படை வீரர்கள் மயக்கம்அடைந்தனர்.
அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், இருவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களுக்கு கடுமை யான காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், ஒடிசாவின் சுந்தர்காரில் மட்டும் வெப்ப அலைக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
பீஹாரில் வெப்ப அலையால் 14 தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்தனர்.
டில்லி, பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், தொடர்ச்சியாக, 45 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி சோமா சென் கூறுகையில், ''வெப்ப அலையால் கடந்த 24 மணி நேரத்தில் பீஹார், ஜார்க்கண்ட், ஒடிசாவில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
''உ.பி., உத்தரகண்ட், ராஜஸ்தான், ம.பி., பீஹார் மற்றும் ஜார்க்கண்டில், இன்று முதல் வெப்ப அலை படிப்படியாக குறையும். பஞ்சாப், ஹரியானா மற்றும் ஒடிசாவில் வெப்ப அலை தொடரும்,'' என்றார்.
டில்லியை பொறுத்தவரை வெயில் வாட்டி வதைத்தாலும், இன்று அல்லது நாளை புழுதிப் புயல் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
இதற்கிடையே, வழக்கு ஒன்றின் விசாரணையின் போது ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கூறியதாவது:
மக்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறி விட்டனர். இதனால், இம்மாதத்தில் மட்டும் நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்துஉள்ளனர்.
நாம் வசிக்க வேறு கிரகம் இல்லை. தற்போது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எதிர்கால சந்ததியினர் என்றென்றும் செழித்து வளர்வதைக் காணும் வாய்ப்பை இழந்து விடுவோம். இது போன்ற வெப்பநிலை நிலவும் போது, தேசிய அவசரநிலையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு கூறிய நீதிமன்றம், வெப்ப அலையால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க, ராஜஸ்தானில் ஆளும் பா.ஜ., அரசுக்கு உத்தரவிட்டது.