Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/ஆயிரம் சந்தேகங்கள்/ஆயிரம் சந்தேகங்கள் :ஐந்து ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாகும் திட்டங்கள் வருமா?

ஆயிரம் சந்தேகங்கள் :ஐந்து ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாகும் திட்டங்கள் வருமா?

ஆயிரம் சந்தேகங்கள் :ஐந்து ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாகும் திட்டங்கள் வருமா?

ஆயிரம் சந்தேகங்கள் :ஐந்து ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாகும் திட்டங்கள் வருமா?

ADDED : மே 11, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
கடந்த நிதியாண்டின் ஆறு மாதங்களில், 25 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கி சேமிப்பில் வைத்துள்ளது என்று பத்திரிகையில் படித்தேன். ரிசர்வ் வங்கி எதற்கு டன் கணக்கில் தங்கத்தை வாங்கி வைக்க வேண்டும்?

கே.ஜே.செல்வராஜ்,

கோத்தகிரி.

நம் ரிசர்வ் வங்கி, 2017 முதலே ஏராளமான தங்கத்தை வாங்கி சேமித்து வருகிறது. அது ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. ரிசர்வ் வங்கி பல்வேறு நாடுகளின் நாணயங்களிலும், பத்திரங்களிலும் முதலீடு செய்து, நம் நாட்டின் சேமிப்பை பெருக்கியுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள், பின்னர் அதிபர் விதித்த இறக்குமதி வரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், சர்வதேச நாணயங்களின் மதிப்பில் ஏற்ற - இறக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவற்றை சமாளிப்பதற்காகவே கூடுதலாக தங்கத்தை வாங்கி சேமித்து வருகிறது நம் நாடு.

ஒரு பொதுத்துறை வீட்டுவசதி நிறுவனத்தில் வீட்டுக் கடன் வாங்கியிருந்தேன். முன்பு இருந்த வட்டியை அவர்களாகவே அதிகப்படுத்தினர். அண்மையில் வட்டி விகிதம் குறைந்ததாக செய்தி பார்த்தேன். அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தேன். இப்போது அதிலிருந்து குறைக்க கட்டணமாக 4,000 ரூபாய் செலுத்தவும், எங்களையே ஆன்லைனில் செய்து கொள்ளுமாறும் சொல்கின்றனர். வட்டிவிகிதம் குறைந்தாலும் பயன் இல்லை என சொல்கிறார்கள். யாரிடம் புகார் அளிப்பது?

ஆர்.ஜி. பிரதாப்,

மின்னஞ்சல்.



நான் தனியார் துறை வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளேன். கடந்த பிப்ரவரி மாதம், ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைந்தபோது, மார்ச் மாதத்தில் இரண்டு இ.எம்.ஐ., குறைத்தனர். ஆனால், ஏப்ரலில் 0.25 சதவீதம் ரெப்போ விகிதம் குறைத்தபோது, மே மாதத்தில் ஒரு இ.எம்.ஐ., மட்டுமே கழித்துள்ளனர். குறைவாக கழித்துவிட்டு, தாங்கள் செய்வதுதான் சரி என வங்கி சொல்கிறது. இதற்கு யாரிடம் முறையிடுவது?

கோமதித்தாய் சரவணன்,

திருநெல்வேலி.

ஒரு சில வங்கிகள், ரெப்போ வட்டி விகித குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வழங்குகின்றன. வேறு சில வங்கிகளோ, புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அந்த சலுகையை வழங்குகின்றன. பழைய வாடிக்கையாளர்கள், கன்வர்ஷன் கட்டணம் செலுத்தி, புதிய வட்டி விகிதத்துக்கு மாறுவதற்கு வற்புறுத்தப்படுகின்றனர். இதில் ஒரே சீரான தன்மை இல்லை.

இதேபோல், ரெப்போ வட்டி விகிதத்தின் பயனாக, வங்கியின் வட்டி குறையுமானால், எத்தனை இ.எம்.ஐ., குறைக்க வேண்டும் என்ற கணக்கிலும் வேறுபாடு இருக்கிறது. வங்கிக்கு வங்கி வித்தியாசமும் இருக்கிறது. இவற்றில் ஏதேனும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை ஆர்.பி.ஐ., வெளியிட்டால், வாடிக்கையாளர் தெளிவுபெறுவர்.

வருங்கால வைப்பு ஓய்வூதியம், குறைந்த பட்சம் 1,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடப்பதாக, சமீப காலமாக நிறைய அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் உண்மை தன்மை என்ன?

சுகுமாரன், சென்னை.

உங்களைப் போல் பலரும் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளனர். ஏதோ, 7,500 ரூபாய் பி.எப்., ஓய்வூதியத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது போன்ற தோற்றம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

உண்மையில், இந்த ஓய்வூதியம் தொடர்பாக, தொழிலாளர் நலத் துறையைச் சாராத வெளியாரைக் கொண்டு ஓர் முழுமையான ஆய்வு மேற்கொள்ளவும், அதன் அறிக்கை டிசம்பர் 2025க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் பார்லிமென்டரி நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இன்னமும் ஓய்வூதியம் உயர்த்தப்படாதது ஏற்புடையது அல்ல, அதனால், இந்த விஷயத்தில் தொழிலாளர் நலத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. உங்கள் காத்திருப்பு மேலும் தொடரும்.

முன்புபோல ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பு தொகை தரும் 'இந்திரா விகாஸ் பத்திரம்' போன்ற அஞ்சலக சேமிப்பு திட்டங்களை மீண்டும் எதிர்பார்க்கலாமா?



ஜி.ராஜேந்திரன்,

வாட்ஸாப்

ஐந்து ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாக வேண்டும் என்றால், தோராயமாக முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை ஒவ்வொரு ஆண்டும் 14, 15 சதவீத ரிட்டர்னை உருவாக்க வேண்டும்.

அது சாத்தியமில்லை. தற்போது கிஸான் விகாஸ் பத்திரம் மட்டும் புழக்கத்தில் இருக்கிறது. அது 7.50 சதவீத கூட்டுவட்டியில், பணம் இரட்டிப்பாக 115 மாதங்கள், அதாவது 9 ஆண்டு, 7 மாதங்கள் எடுத்துக்கொள்கிறது.

ஐந்து, ஆறு ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாக வேண்டும் என்றால், இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பு, மியூச்சுவல் பண்டுகள் தான். ஆனால், உங்களுக்கு ரிஸ்க் எடுக்கும் துணிவு இருந்தால் மட்டுமே இதில் இறங்க வேண்டும்.

அஞ்சலக வங்கியின் வாயிலாக, தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்வது எப்படி?

ஒய்.மனோஜ் குமார்,

தென்காசி.

புதிய தங்க முதலீட்டுப் பத்திர திட்டம் எதையும் மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லையே? இனிமேல் இத்தகைய திட்டம் அறிவிக்கப்படாது என்று தான் தெரிகிறது. ஒருவேளை அறிவிக்கப்பட்டால், நீங்கள் அஞ்சலகங்களில் இருந்தும் வாங்கிக்கொள்ளலாம்.

அசலுடன் கூட்டுவட்டி முறையில் மொத்த வட்டியையும் சேர்த்து முதிர்வு தொகையாக சில ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் வங்கி வைப்பு நிதியில், ஒவ்வொரு ஆண்டும் சேரும்.

டிபாசிட் வட்டியை, வரிக்கான வருமானமாக அவ்வப்போது கணக்கிடுவது சரியா?

என்.சம்பத், சென்னை.

முதிர்வு சமயத்தில் அந்தக் கூட்டு வட்டியையும் அசலையும் தாங்கள் வங்கியில் இருந்து மொத்தமாக பெறுகிறீர்கள் என்றாலும், அந்த வட்டியானது ஒவ்வொரு ஆண்டும், உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அப்படியென்றால், அது அந்தந்த ஆண்டுக்கான வருமானம் தானே? மேலும் இந்த வட்டியானது ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு மேல் சேருமானால் தான் டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படும்.

இந்த நிதியாண்டில், மூத்த குடிமக்களுக்கான டி.டி.எஸ்., வரையறை ஒரு லட்சம் ரூபாய் வரையும் அதற்குக் குறைவான வயதுடையவர்களுக்கு 50,000 ரூபாய் வரையும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us