Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ஆயிரம் சந்தேகங்கள்: 'டெபிட் கார்டு' வைத்திருப்பவர்களுக்கு 'இன்ஷூரன்ஸ் கவரேஜ்' உண்டா?

ஆயிரம் சந்தேகங்கள்: 'டெபிட் கார்டு' வைத்திருப்பவர்களுக்கு 'இன்ஷூரன்ஸ் கவரேஜ்' உண்டா?

ஆயிரம் சந்தேகங்கள்: 'டெபிட் கார்டு' வைத்திருப்பவர்களுக்கு 'இன்ஷூரன்ஸ் கவரேஜ்' உண்டா?

ஆயிரம் சந்தேகங்கள்: 'டெபிட் கார்டு' வைத்திருப்பவர்களுக்கு 'இன்ஷூரன்ஸ் கவரேஜ்' உண்டா?

ADDED : ஜூன் 17, 2024 01:06 AM


Google News
Latest Tamil News

பொதுவாக, அரசு வங்கிகளில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் எவ்வளவு? மூத்த குடிமக்கள், வரி விதிப்பு வரம்புக்குள் வராமல், எவ்வளவு தொகை வரை வருமானம் ஈட்டலாம்? அதற்கும் வரி விலக்கு கோரும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டுமா?


எஸ்.ஜெ.ராஜன், மதுரை.

மூத்த குடிமக்கள் என்றால், 60 வயதுக்கு மேல், 80 வயதுக்குள் என்று கருதிக் கொள்கிறேன். இவர்களுக்கு வருமான வரிப் பிரிவு, '80TTB'யின் கீழ், வங்கி சேமிப்பில் இருந்து வரக்கூடிய வட்டிக்கு, 50,000 ரூபாய் வரை வரி விலக்கு உண்டு. இது, வங்கி சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, அஞ்சலக சேமிப்பு, கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள சேமிப்பு ஆகிய அனைத்திலிருந்தும் கிடைக்கும் மொத்த வட்டிக்கான வரி விலக்கு என்பது ஞாபகம் இருக்கட்டும்.

தற்போது பொதுத்துறை வங்கிகள் 7 - 7.75 சதவீதம் வரை வட்டி கொடுக்கின்றன. அதனால், நீங்கள் வரி சேமிப்பு வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் ஐந்து ஆண்டுகள் வரை முதலீடு செய்திருக்க வேண்டும்; நடுவில் எடுக்க முடியாது.

ஆண்டுதோறும், 1 லட்சம் ரூபாய் வீதம் வரி சேமிப்பு வைப்பு நிதியில் போட்டு வந்தால், ஐந்து ஆண்டுகளின் முடிவில் கூட நீங்கள் ஈட்டும் வட்டி, 50,000 ரூபாய்க்குள் தான் இருக்கும்; வரி கட்ட வேண்டியிராது. அதேபோல், படிவம் 15ஜியும் கொடுக்க வேண்டியிராது.இது கொஞ்சம் திட்டமிட்டு செய்யப்பட வேண்டிய முதலீடு. நல்ல ஆடிட்டரிடம் கலந்தாலோசித்து செய்யுங்கள்.

'டெபிட் கார்டு' வைத்திருப்பவருக்கு, 'இன்ஷூரன்ஸ் கவரேஜ்' உண்டு என்று சொல்கின்றனரே? அப்படியா?


பாஸ்டர் டி.சாந்தகுமார்,

தேனி.

ஆமாம்; உண்டு. ஒவ்வொரு வங்கியும், ஏ.டி.எம்.,மில் பயன்படுத்தும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, பல்வேறு விதமான காப்பீடுகளை வழங்கு கிறது. பொதுவாக, டெபிட் கார்டு தொலைந்து போனாலோ, திருடு போனாலோ, அதை உடனடியாக வங்கிக்கு தெரிவித்தால், அதன் பிறகு அந்த அட்டையில் நடைபெறும் எந்தவிதமான பரிவர்த்தனைக்கும் அவர் பொறுப்பல்ல.

விபத்து காப்பீடும் உண்டு. உங்களுடைய கார்டின் வகைக்கு ஏற்ப, 10 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு பெறலாம். தொடர்ச்சியாக விமானப் பயணம் மேற்கொள்கிறவர்களுக்கு, விமான விபத்து காப்பீடு கொடுக்கப்படுகிறது. டெபிட் கார்டு வாயிலாக வாங்கப்படும் பொருட்கள் சேதமுற்றாலோ, தொலைந்து போனாலோ, அதற்கும் காப்பீடு உண்டு.

பயணத்தின் போது பெட்டிகள் தொலைந்து போனால், அதற்கும் காப்பீடு உண்டு. டெபிட் கார்டு கொடுக்கும் ஒவ்வொரு வங்கியும், இவற்றில் பல அம்சங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

இதில், பல உள் விதிமுறைகளும், வரையறைகளும் உள்ளன. உங்கள் வங்கி என்ன தருகிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் என் மகனின் சம்பளத்தை, அவனுடைய வங்கி கணக்கிலிருந்து என் வங்கி கணக்கிற்கு அனுப்பச் செய்து, என் பெயரில் உள்ள டிமேட் கணக்கு வாயிலாக, பங்குகளில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்து வருகிறேன். இந்த முதலீட்டு தொகையை, மகனிடமிருந்து நான் கடன் பெற்றுள்ளதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா? மகன் பெயரில் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யக் கூடாது என்பதாக, ஐ.டி., நிறுவன விதிமுறை உள்ளதாம்.


கே.எம்.ஜான்சி, மதுரை.

உங்கள் மகனிடம் இருந்து நீங்கள் பெறும் தொகை 'பரிசாக' கருதப்படும். அதற்கு வரி ஏதும் கட்ட வேண்டியதில்லை. ஆனால், நீங்கள் வேறொரு பெரிய சிக்கலை சாதாரணமாக சொல்கிறீர்கள்.

உங்கள் மகனது நிறுவனம், அவர் எந்தவிதமான பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களிலும் முதலீடு செய்யக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது என்றால், அவர்கள் பல்வேறு நிறுவனங்கள் தொடர்பான சென்சிட்டிவ்வான தகவல்களை முன்னதாகவே அறிந்து வைத்திருக்கின்றனர் என்று அர்த்தம்.

அதைப் பயன்படுத்திக்கொண்டு, லாபம் பார்க்கக்கூடாது. அப்படி செய்தால் அதற்கு 'இன்சைடர் டிரேடிங்' என்று அர்த்தம்.

சம்பந்தப்பட்ட பணியாளர் மட்டுமல்ல, அவரது நெருங்கிய உறவினர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தாலும், அதுவும் இன்சைடர் டிரேடிங் என்ற வரையறைக்குள் தான் வரும். இதற்கு கடுமையான தண்டனைகள் உண்டு.

உங்கள் மகனுக்கும் இதனால் சிக்கல் ஏற்படலாம். நல்ல ஆடிட்டர் ஒருவரை கலந்தாலோசிக்கவும்.

என் மகள் 2017 முதல் பி.எப்., பங்களிப்பு செய்யவில்லை. வெளிநாடு சென்றுவிட்டார். அவரது சேமிப்பு தொகைக்கு வட்டி போடுவரா? அல்லது முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு பண்டுக்கு அனுப்பி விடுவரா?


ஜெ.ராமு, வளசரவாக்கம்.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு குறிப்பிட்ட பி.எப்., கணக்கில் தொடர்ச்சியாக எந்த பங்களிப்புத் தொகையும் வரவு வைக்கப்படவில்லை எனில், அந்தக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி போடப்படாது.

அந்தக் கணக்கு 'இன் ஆபரேடிவ்' ஆகிவிடும். ஏழு ஆண்டுகள் வரை எந்தப் பங்களிப்பும் இல்லை எனில், அந்தக் கணக்கில் உள்ள பணம், 'மூத்த குடிமக்கள் நல நிதி'க்கு மாற்றப்படும்.

இந்த நல நிதிக்கு மாற்றப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டால், மொத்த தொகையும் அரசுக்கு சென்று சேர்ந்துவிடும். உங்கள் மகள் 2017 முதல் பி.எப்., பங்களிப்பு செய்யவில்லை என்பதால், அவரது பி.எப்., தொகைக்கு இப்போது வட்டி கிடைக்காது. அது இன் ஆபரேடிவ் ஆகியிருக்கும்.

ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டதால், உங்கள் மகளது பங்களிப்பு, மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றப்பட்டு இருக்கலாம். இந்தத் தொகையை திரும்ப வாங்க முடியும். ஆனால், உங்கள் மகள் தன் ஆவணங்களை வழங்கி, தன் அடையாளத்தை நிரூபிக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் சிரமம் தான்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்

ph: 98410 53881





      Our Apps Available On




      Dinamalar

      Follow us