/செய்திகள்/வர்த்தகம்/ஆயிரம் சந்தேகங்கள்/ ஆயிரம் சந்தேகங்கள்: கூடுதல் வட்டி தரும் கூட்டுறவு சங்கத்தில் பணம் போடலாமா? ஆயிரம் சந்தேகங்கள்: கூடுதல் வட்டி தரும் கூட்டுறவு சங்கத்தில் பணம் போடலாமா?
ஆயிரம் சந்தேகங்கள்: கூடுதல் வட்டி தரும் கூட்டுறவு சங்கத்தில் பணம் போடலாமா?
ஆயிரம் சந்தேகங்கள்: கூடுதல் வட்டி தரும் கூட்டுறவு சங்கத்தில் பணம் போடலாமா?
ஆயிரம் சந்தேகங்கள்: கூடுதல் வட்டி தரும் கூட்டுறவு சங்கத்தில் பணம் போடலாமா?
ADDED : செப் 22, 2025 02:09 AM

சீட்டு நிறுவனம் ஒன்றில் என் சகோதரர் 30 லட்சம் ரூபாய் சீட்டு சேர்ந்து, இந்த மாதம் முடிகிறது. கட்ட வேண்டிய தொகை 2.90 லட்சம் என்று நிர்வாகம் சொன்னதால், அதை கட்டுவதற்கு செல்லும்போது, மேலும் 50,000 ரூபாய் கேட்டு இடத்தின் ஷூரிட்டியாக கொடுத்த வீட்டு பத்திரத்தை தர மறுக்கின்றனர். இது சம்பந்தமாக எந்த அலுவலகத்தில் புகார் தர வேண்டும்?
ஆர்.பிரேம் சுதாகர், பெரியகுளம்
மதுரையில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் (Joint / Regional Registrar of Chits) அலுவலகம் உள்ளது. அங்கு சென்று, சீட்டு திட்டத்தின் விபரங்கள், ஒப்பந்த நகல்கள், ஷூரிட்டி பாண்டு விபரங்கள் போன்ற அனைத்தையும் இணைத்து எழுத்துப்பூர்வமாக புகார் செய்யுங்கள். அதிகாரிகள் உங்கள் புகாரை பதிவு செய்து, சட்டப்படி விசாரணை நடத்துவர்.
ஏறத்தாழ 30 லட்சம் ரூபாயில் வீடு கட்டி, மாதாமாதம் 30,000 ரூபாய் வாடகை பெறுவது சிறப்பா? அல்லது, அதே தொகையில் ஒரு பகுதியை அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திலும், இன்னொரு பகுதியை மியூச்சுவல் பண்டு 'லம்ப் சம்' சேமிப்பிலும், இன்னொரு பகுதியை எஸ்.ஐ.பி., வாயிலாகவும் சேமிப்பது சிறந்ததா?
டாக்டர் நஞ்சப்ப செட்டி, சென்னை
ஏறத்தாழ 30 லட்சத்தில் வீடு கட்டி, 30,000 ரூபாய் வாடகை பெற முடியாது; குறைந்தபட்சம் மூன்று அறை கொண்ட 'பிளாட்'டாக நல்ல இடத்தில் இருந்தால் தான் இந்த வாடகை கிடைக்கும்.
அதற்கான முதலீடு, இன்றைய தேதியில் குறைந்தபட்சம் 1.52 கோடி ரூபாய். நீங்கள் ஒப்பீட்டுக்காக கேட்கிறீர்கள் என்று புரிந்து கொள்கிறேன். நீங்கள் இரண்டாவதாக தெரிவித்த முதலீடு, தாராளமாக சிறப்பான வருவாயை ஈட்டித் தரும்.
கடந்த 10 ஆண்டுகளாக மியூச்சுவல் பண்டுகளில், லம்ப்- சம் மற்றும் எஸ்.ஐ.பி., இரண்டு வழிமுறைகளின் வாயிலாகவும் செய்யப்பட்ட முதலீடுகள் என்ன ரிட்டர்னை ஈட்டித் தந்துள்ளன என்று படித்துக் கொண்டிருந்தேன். லார்ஜ் கேப், ப்ளெக்ஸி கேப், இ.எல்.எஸ்.எஸ்., பண்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகளில், எஸ்.ஐ.பி., முறையில் செய்யப்பட்ட முதலீடு தான் கூடுதல் லாபத்தை தந்துள்ளன.
அதுவும் ப்ளெக்ஸி கேப் பண்டுகள் தோராயமாக 12 முதல் 14 சதவீதமும், ஒரு சில ஆண்டுகளில் 19 சதவீதத்துக்கு மேலும் வருவாய் ஈட்டியுள்ளன. இந்த வருவாய் நிச்சயம் வாடகை வாயிலாக பெறக்கூடியது அல்ல.
தங்க இ.டி.எப்.,களில் முதலீடு செய்வது எப்படி? தங்க இ.டி.எப்., விற்பனை செய்யும் முகவராக மாறுவது எப்படி?
எத்திராஜ், வாட்ஸாப்
தங்க இ.டி.எப்.,களில் முதலீடு செய்ய டீமேட், டிரேடிங் கணக்குகள் வேண்டும். இவற்றை பெறுவதற்கு உதவி செய்ய, இன்றைக்கு பல பங்கு சந்தை புரோக்கிங் நிறுவனங்கள் உள்ளன. கணக்கு துவங்கிய பின், இந்திய சந்தையில் உள்ள பல்வேறு மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் தங்க இ.டி.எப்.,களை ஆய்வு செய்து, பின்னர் முதலீடு செய்யுங்கள்.
டீமேட் இல்லாதவர்களுக்கு, தங்க மியூச்சுவல் பண்டு - பண்டு ஆப் பண்டு (Gold Mutual Fund (FoF) வாயிலாகவும் தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
தங்க இ.டி.எப்.,களை விற்பனை செய்வதற்காக முகவராக மாற, முதலில் நீங்கள் மியூச்சுவல் பண்டு ஆலோசகராக மாற வேண்டும். அதற்கு, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட் நடத்தும் தேர்வில் பாஸாகி, 'ஆம்பி'யின் பதிவு எண் பெற வேண்டும். இவற்றை பெற்ற பின், தங்க இ.டி.எப்., மட்டுமல்ல; மற்ற மியூச்சுவல் பண்டு திட்டங்களையும் நீங்கள் விற்பனை செய்யலாம்.
எங்கள் பகுதியில் மல்டி ஸ்டேட் கோ-ஆபரேட்டிவ் சொஸைட்டி உள்ளது. வட்டி விகிதம் 9.50 முதல் 12.50 சதவீதம் வரை தருகின்றனர். மூத்த குடிமக்களுக்கு வட்டி 0.50 சதவீதம் அதிகம். 28 ஆண்டுகளாக செயல்படுகிறது. இதில் இணைந்து ரெக்கரிங் டெபாசிட் மற்றும் வைப்பு நிதி துவங்கலாமா? இந்த வட்டி விகிதம் சாத்தியமா?
பா.பாலாஜி, பொள்ளாச்சி
நீண்டகாலமாக இயங்கி வருகிறது என்பது அதன் நம்பகத்தன்மைக்கு அடையாளம் தான். பல கூட்டுறவு சங்கங்கள் முறையாக இயங்குகின்றன என்பதையும் மறுக்கவில்லை.
ஆனால், சில அடிப்படை சிக்கல்களை சொல்லி விடுகிறேன். இத்தகைய மல்டி ஸ்டேட் கோ-ஆபரேட்டிவ் சொஸைட்டிகள், ஆர்.பி.ஐ.,யிடம் இருந்து வங்கிக்கான லைசென்ஸ் பெறாமல், கூட்டுறவு சொஸைட்டிகளின் கீழ் பதிவு செய்து நடத்தப்படுவதால், 5 லட்சம் ரூபாய் வரைக்கான வைப்பு நிதி காப்பீடு வசதி இவற்றில் கிடையாது.
பல முன்னணி கூட்டுறவு சொஸைட்டிகளில் நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. பின்னர் பதிவாளர் தலையிட்டு பிரச்னையைத் தீர்க்க முயலுவார் அல்லது லிக்விடேஷன் நடைமுறை மேற்கொள்ளப்படும். அத்தகைய சூழலில், இதில் முதலீடு செய்தவர்களால், பணத்தை உடனடியாக எடுக்க முடியாமல் தவிப்பது தொடர்கிறது. பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம்; சிறிய அளவில் முதலீடு செய்யுங்கள்.
என் உறவினர் ஒருவர் 22 சதவீத வட்டியில் பிசினஸ் கடன் வாங்கியுள்ளார். ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் படி, பிசினஸ் கடனுக்கும் வட்டி குறையுமா? அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அந்த கடனுக்கான வட்டி அளவு குறைந்துள்ளதா என்பதை எப்படி அறிவது?
இரா.சண்முகசுந்தரம், அவினாசி
ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளதால், பல நிதி நிறுவனங்களும் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. நீங்கள் சொல்லும் வட்டியைப் பார்த்தால், ஏதோ தனியார் துறை நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கப்பட்டிருக்கும் போல் தோன்றுகிறது.
ரெப்போ வட்டி குறைப்பின் பலன், ஒரு சில பெரிய பொதுத் துறை, தனியார் துறை வங்கிகள் தான் உடனடியாக பயனர்களுக்கு கொடுத்துள்ளன. முடிந்தால் உங்கள் உறவினரை நேரடியாக நிதி நிறுவனத்திடம் போய் பேச சொல்லி, வட்டியை மாற்றித்தர சொல்லிக் கேளுங்கள். இல்லையெனில், குறைவான வட்டியில் கடன் தரும் வேறு ஏதேனும் பொதுத் துறை வங்கிகளுக்கு கடனை மாற்றிக்கொள்ள முடியுமா என்று பாருங்கள்.
என்னிடம் 3,000 எம்கோ லிமிடெட் பங்குகள் உள்ளன. எந்த தகவலும் இல்லாமல், என் பங்குகள் அனைத்தும் மதிப்பிழந்துவிட்டன என்று குறுஞ்செய்தி வருகிறது. எந்தவிதமான பரிகாரமும் எனக்கு வழங்கப்படவில்லை. இதில் நான் என்ன செய்வது?
கே.ராமச்சந்திரன், மின்னஞ்சல்
ரொம்ப லேட்டாக கேட்கிறீர்களே? 2019 முதலே இந்த நிறுவனம் திவால் சட்டத்தின் கீழ் போய், அதன் சொத்துக்களை விற்பனை செய்து, கடன்காரர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்லிவிட்டனரே? பங்கு சந்தையில் முதலீடு செய்வது மட்டும் முக்கியமில்லை.
அந்த பங்குகளுடைய நிறுவனங்களுக்கு என்ன ஆயிற்று, உயிருடன் உள்ளனவா இல்லையா என்றெல்லாம் அவ்வப்போது பார்க்க வேண்டும். உங்கள் பங்குகளுக்கு எந்த மதிப்பும் தற்போது இல்லை. வருமான வரி செலுத்தும்போது, மூலதன நஷ்டம் என்று காண்பித்து, வரியை குறைத்துக்கொள்ள பாருங்கள் .
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை,'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881