ADDED : மார் 28, 2025 01:09 AM

மீண்டு(ம்) ஏற்றப்பாதையில்
வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவு செய்தன. அன்னிய முதலீடுகள் தொடர்வதன் காரணமாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் பங்குகள் 6 சதவீதம் வரை சரிவைக் கண்டன. இதன் எதிரொலியாக, சந்தை குறியீடுகள் லேசாக சரிந்தன.ஆனால், சிறிது நேரத்திலேயே, ரிலையன்ஸ், எல் அண்டு டி., எச்.டி.எப்.சி., வங்கி உட்பட முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், நேற்று நாள் முழுதும் சந்தை உயர்வுடன் வர்த்தகமாகியது. வர்த்தக நேர முடிவில், நிப்டி, சென்செக்ஸ் தலா 0.50 சதவீத உயர்வுடன் நிறைவடைந்தன.
செபி நேற்று வெளியிட்ட புதிய அறிவிப்பில் முன்பேர வணிகத்தின் வாராந்திர காலாவதியை செவ்வாய்கிழமை அல்லது வியாழக்கிழமைக்கு மாற்றுமாறு முன்மொழிந்துள்ளது.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை, நேற்று 1 பேரலுக்கு 0.23 சதவீதம் குறைந்து, 73.62 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்து, 85.74 ரூபாயாக இருந்தது.