/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/சந்தையின் போக்கை காலாண்டு முடிவுகள் தீர்மானிக்கும்சந்தையின் போக்கை காலாண்டு முடிவுகள் தீர்மானிக்கும்
சந்தையின் போக்கை காலாண்டு முடிவுகள் தீர்மானிக்கும்
சந்தையின் போக்கை காலாண்டு முடிவுகள் தீர்மானிக்கும்
சந்தையின் போக்கை காலாண்டு முடிவுகள் தீர்மானிக்கும்
ADDED : ஜன 06, 2024 08:37 PM

திங்கள்: தனியார் மற்றும் அரசாங்கம் மேற்கொள்ள வாய்ப்புஉள்ள வளர்ச்சிக்கான முதலீடுகள் மற்றும் கிராமப்புறத்தில் வசிக்கும் மக்கள் அதிக அளவிலான செலவுகள் செய்வதற்கான சூழல் உருவாகியிருப்பதால், 2024ம் ஆண்டில், ஒரு சில துறைகள் கணிசமாக பலனடைய வாய்ப்புஉள்ளது என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருக்கும் செய்தி திங்களன்று வெளியானது.
செவ்வாய்: 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி., தொகை 1.64 லட்சம் கோடியானது, 2022ம் ஆண்டு டிசம்பர் மாத வசூலை விட அதிகமானதாகவும்; 2023ம் ஆண்டு நவம்பர் மாத வசூலை விட குறைவானதாகவும் இருந்தது என்ற செய்தி செவ்வாயன்று வெளியானது.
புதன்: இந்திய மியூச்சுவல் பண்டுகள் மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் என்ற இரண்டு பிரிவினரும் சேர்ந்து, இந்திய சந்தையில் 90,029 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இந்திய சந்தையில் 2023ம் ஆண்டில் செய்திருந்தன என்ற செய்தி புதனன்று வெளியானது.
கடந்த, 2023ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி, இந்திய பங்குச் சந்தையில் சந்தை மதிப்பு 340.3 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்திருந்தது என்ற செய்தியும் அன்று வெளியானது.
வியாழன்: உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாடு, கடந்த பதினெட்டு மாதங் களில் இருந்ததை விட குறைவான அளவில் டிசம்பர் 2023ல் இருந்தது என்ற செய்தி வியாழனன்று வெளியானது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் இன்னும் சற்று காலம் வட்டிவிகிதம் தற்போது இருக்கும் அளவில் இருக்க வாய்ப்புள்ளது என்றும்; அதேசமயம் 2024ம் ஆண்டில் வட்டிவிகிதம் குறைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் முடிவெடுக்கப்பட்ட கூட்டத்தின் அவைக்குறிப்பும் அன்று வெளியானது.
வெள்ளி: மூன்றாவது காலாண்டில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்களின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது என்ற செய்தி வெளியானது. டிசம்பர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, கேப்பிடல் குட்ஸ் துறைகளில் டிசம்பர் மாதத்தின் பின்பகுதியில் அதிக அளவில் முதலீடு செய்திருந்தனர் என்றும்; டிசம்பர் மாதத்தில் அவர்களது அதிக அளவிலான முதலீடு நிதி சார்ந்த சேவைகள் துறையில் இருந்தது என்றும் செய்தி வெளியானது.
வரும் வாரம்
எம்3 பணப்புழக்கம், வங்கிகளின் கடன் மற்றும் வைப்புத்தொகை கண்ட வளர்ச்சி, தொழிற்சாலைகளில் நடந்த உற்பத்தி, பணவீக்கம் போன்ற சில இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்கின்றன
நுகர்வோர்களின் பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்புகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தின் நிகர அளவு, பணவீக்கம், உற்பத்தியாளர்களின் விலை ஏற்ற குறியீடு போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த திங்களன்று புதிய உச்சத்தை தொட்ட சந்தை, அதன் பின், ஏற்ற இறக்கங்களுடன் நடந்து, வாரத்தின் இறுதியில் சற்று ஏற்றத்துடன் நிறைவு பெற்றிருந்தது.
முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே, நிப்டியின் அடுத்த நகர்வு இருக்க வாய்ப்புள்ளது. செய்திகள் மற்றும் நிகழ்வுகளும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால், அவற்றின் மீதும் வர்த்தகர்கள் கவனம் வைத்து செயல்படவேண்டும்
டெக்னிக்கலாக ஏறுவதற்கு தயங்கும் சூழல் தென்படுவதால், வியாபாரம் செய்யும் எண்ணிக்கையின் அளவை குறைத்தும்; ஸ்டாப்லாஸ்களை மிகவும் குறுகியதாக வைத்துக்கொண்டும், செயல்படுவதே சிறந்த உத்தியாக இருக்க வாய்ப்புள்ளது.
வாரத்தின் இறுதியில், டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில், நிப்டி ஏறுவதற்கு தயக்கம் உருவான சூழல் இருப்பதைப்போன்ற நிலைமை இருக்கின்றது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
எதிர் வரும் வாரங்களிலும் காலாண்டு முடிவுகள் பலவும் வெளிவர இருக்கின்ற காரணத்தினால், அவை குறித்த எதிர்பார்ப்புகளும் சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும்.
எனவே வர்த்தகர்கள், எச்சரிக்கையுடன், குறுகிய நஷ்டம் குறைக்கும் அல்லது தவிர்க்கும் ஸ்டாப் லாஸ்களை வைத்துக்கொண்டும், லாபம் வந்தால் துரிதமாக அதனை வெளியே எடுத்துக்கொள்ளும் வகையிலான திட்டத்துடனும் மட்டுமே வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலனை செய்வது நல்லது.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 21529, 21348 மற்றும் 21220 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 21863, 22016 மற்றும் 22143 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான தடைகளையும், டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியின் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 21682 என்ற அளவிற்கு கீழே போகாமல் தொடர்ந்து வர்த்தகமாக வேண்டும்.