ADDED : பிப் 24, 2024 09:04 PM

இந்திய முதலீட்டாளர்கள் வங்கிகளில் வைப்பு நிதியாக வைத்திருப்பதை விட பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விரும்பி செய்ய துவங்கியுள்ளனர் என்ற செய்தி திங்களன்று வெளியானது
விருந்தோம்பல் துறையின் விற்று வரவானது, 11 முதல் 13 சதவீதம் வரையிலான வளர்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று க்ரிசில் நிறுவனம் கணித்துள்ளது என்ற செய்தி செவ்வாயன்று வெளியானது.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் மியூச்சுவல் பண்ட்களில் செய்யப்பட்டிருக்கும் மொத்த முதலீடானது லார்ஜ் கேப் மியூச்சுவல் பண்ட்களில் செய்யப்பட்டிருப்பதில் 83% அளவினை ஜனவரி 2024ல் எட்டியிருந்தது என்ற செய்தியும் அன்று வெளியானது
டிசம்பர் 2023ல் உருவான புதிய வேலை வாய்ப்புகள், கடந்த மூன்று மாத காலத்தில் இருந்ததை விட அதிக அளவிலானதாக இருந்தது என்ற செய்தி புதனன்று வெளியானது
ஜனவரி 2024ல் மியூச்சுவல் பண்ட்களில் புதிதாக, ஒரு மில்லியன் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர் என்ற செய்தி வியாழனன்று வெளியானது.
இந்தியாவில் உள்ள ஐந்து முக்கிய துறைமுகங்கள் ஜனவரி 2024ல் கையாண்ட சரக்குகளின் அளவு கடந்த ஐந்து வருடங்களில் இருந்ததைவிட அதிக அளவாக இருந்தது என்ற செய்தி வெள்ளியன்று வெளியானது. ஜெப்ரிஸ் தரகு நிறுவனம் இந்திய பங்கு சந்தையின் சந்தை மதிப்பு 2030ம் ஆண்டில், 10 டிரில்லியன் டாலர் என்ற அளவினை எட்ட வாய்ப்புள்ளது என்று கணித்திருக்கின்றது என்ற செய்தியும் அன்று வெளியானது.
வரும் வாரம்
ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், உள்கட்டமைப்பு ஆக்க அளவு, எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
புதிய வீடுகள் விற்பனை, நீடித்து உழைக்கக்கூடிய பொருட்களின் உற்பத்தி, எஸ் அண்டு பி கேஸ்-ஷில்லர் வீடுகளின் விலை, சிபி நுகர்வோர் கொண்டிருக்கும் நம்பிக்கை, ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், தனி நபர் நுகர்வு செலவுகள் குறியீடு, தனி நபர் வருமானம், தனி நபர் செலவுகள் போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியது
கடந்தவாரம் திங்களன்று வர்த்தக நாளின் இறுதியில், 81 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டிசெவ்வாயன்று 74 புள்ளிகள் ஏற்றம், புதனன்று 141 புள்ளிகள் இறக்கம், வியாழனன்று 162 புள்ளிகள் ஏற்றம், வெள்ளியன்று 4 புள்ளிகள் இறக்கம் என்கிற ரீதியிலான ஏற்ற இறக்கங்களை கண்டிருந்தது
பிப்ரவரி மாத எப் அண்டு ஓ ஒப்பந்தங்கள் வியாழனன்று நிறைவடைகின்றன. வாரத்தின் ஆரம்பத்தில் இதற்கான நகர்வுகள் சந்தையில் காணப்பட வாய்ப்புள்ளது என்பதை வர்த்தகர்கள் கவனத்தில் வைக்க வேண்டும்.
டெக்னிக்கல் அனாலிசிஸின் அடிப்படையில் நிப்டியில் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளதைப் போன்ற சூழ்நிலை தெரிந்தாலுமே சந்தை சார்ந்த செய்திகள் மற்றும் நிகழ்வுள் மட்டுமே நிப்டியின் அடுத்த கட்ட பயணத்தை நிர்ணயிப்பதாய் இருக்கும். வர்த்தகர்கள் இவை அனைத்திலும் கவனம் வைத்து வர்த்தகம் செய்ய முயல்வதே சிறந்தது.
வாரத்தின் இறுதியில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கான சூழல் இருப்பதைப் போன்ற நிலைமை இருக்கின்றது.
எனினும் கடந்த சில வாரங்களாக நடந்து வருகின்ற ஏற்ற, இறக்கங்களின் அடிப்படையில் பார்த்தால் செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தன்மைக்கு ஏற்றால் போல் சந்தையில் ஏற்ற, இறக்கங்கள் தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதை போன்றே தோன்றுகின்றது.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 21,959, 21,706 மற்றும் 21,545 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும் (சப்போர்ட்), 22,382, 22,551 மற்றும் 22,712 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் (ரெசிஸ்டென்ஸ்) டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. நிப்டியின் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 22,128 என்ற அளவிற்கு மேலே சென்று அதற்கு மேலேயே தொடர்ந்து வர்த்தகமாக வேண்டும்.