ADDED : மார் 12, 2025 01:47 AM

தரவுகளுக்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள்
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகளான நிப்டி உயர்வு; சென்செக்ஸ் இறக்கம் என கலவையாக நிறைவு செய்தன. வர்த்தகப் போர் தாக்கத்தால், பொருளாதார மந்த நிலை அபாயம் காரணமாக, நேற்று ஒரே நாளில் அமெரிக்க பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்றனர். இதன் எதிரொலியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, இந்திய சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின.
தொடர்ந்து, ஐ.டி., வங்கித் துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்றனர். மாறாக, ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கியதால், பிற்பகல் வரை சந்தை ஊசலாட்டத்துடன் வர்த்தகமாகியது.
நேற்றைய வர்த்தகத்தின்போது, இண்டஸ்இண்ட் வங்கியின் வசமுள்ள பங்குகளில் 1,580 கோடி ரூபாய் அளவுக்கு, முரண்பாடுகள் இருப்பதாக வெளியான செய்தியை அடுத்து, சந்தையில் அந்நிறுவன பங்குகள் 27 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டு, 52 வாரங்களில் காணாத வீழ்ச்சியைக் கண்டது.
பிற்பகல் வர்த்தக நேரத்தின்போது, சந்தை உயர்வு பாதைக்கு திரும்பியது. ஆனால், நாளை வெளியாகும் சில்லரை விலை பணவீக்கம் தொடர்பான தரவுகளுக்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள், பெரியளவில் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாததால், சந்தை குறியீடுகள் கலவையுடன் நிறைவு செய்தன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 2,824 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.71 சதவீதம் உயர்ந்து, 69.77 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா அதிகரித்து, 87.21 ரூபாயாக இருந்தது.