/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பட்டுவாடா நிலுவைக்கு தீர்வு காணும் குழு துாத்துக்குடியில் நிறுவ கோரிக்கை பட்டுவாடா நிலுவைக்கு தீர்வு காணும் குழு துாத்துக்குடியில் நிறுவ கோரிக்கை
பட்டுவாடா நிலுவைக்கு தீர்வு காணும் குழு துாத்துக்குடியில் நிறுவ கோரிக்கை
பட்டுவாடா நிலுவைக்கு தீர்வு காணும் குழு துாத்துக்குடியில் நிறுவ கோரிக்கை
பட்டுவாடா நிலுவைக்கு தீர்வு காணும் குழு துாத்துக்குடியில் நிறுவ கோரிக்கை
ADDED : ஜூன் 06, 2024 02:13 AM

சென்னை:தென் மாவட்டங்களில் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு, பெரிய நிறுவனங்கள் தாமதம் இன்றி பணம் வழங்க, துாத்துக்குடியில் 'வசதியாக்கல் குழு'வை அமைக்குமாறு தொழில்முனைவோர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை, வாகனங்கள், இயந்திரங்களுக்கான உதிரிபாகங்கள், மின்னணு உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
அவற்றை வாங்கும் பெரிய தொழில் நிறுவனங்கள், குறித்த காலத்தில் பணம் தராமல் தாமதம் செய்கின்றன. இதனால், வாங்கிய மூலப்பொருட்களுக்கு பணம் தர முடியாமலும், கடனை செலுத்த முடியாமலும் நிதி நெருக்கடிக்கு சிறு தொழில் நிறுவனங்கள் ஆளாகின்றன.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில் வசதியாக்கல் குழுக்கள் செயல்படுகின்றன. அக்குழு தலைவராக, குறு, சிறு, நடுத்தர தொழில்துறையின் கீழ், தொழில் வணிக ஆணையர் உள்ளார். இக்குழு மாதந்தோறும் புகார் மனுக்களை பெற்று, விசாரிக்கிறது.
பெரிய நிறுவனங்களிடம் இருந்து, 45 நாட்களுக்கு மேல் பணம் கிடைக்காமல் பாதிக்கப்படும் நிறுவனங்கள், வசதியாக்கல் குழுவில் புகார் அளிக்கலாம். அங்கு இதுகுறித்து விசாரித்து நிலுவைத் தொகையையும், அதற்கான வட்டியையும் சேர்த்து வசூலித்து தரப்படும்.
இக்குழு அளிக்கும் உத்தரவை எதிர்க்கும் பெரிய நிறுவனங்கள், உயர் நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும். அங்கும் நிலுவையில் உள்ள பணத்தில், 75 சதவீத தொகையை செலுத்த வேண்டும். தென் மாவட்டங்களில் உள்ள குறு, சிறு நிறுவனங்கள், துாத்துக்குடியிலும் இத்தகைய வசதியாக்கல் குழுவை அமைக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளன.
இதுகுறித்து, 'துடிசியா' எனப்படும் துாத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் நேரு பிரகாஷ் கூறியதாவது:
திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள், மதுரை வசதியாக்கல் குழு கூட்டத்தில் பங்கேற்க சென்று, வர பணமும், நேரத்தையும் அதிகம் செலவிடுகின்றன.
துாத்துக்குடியில் ஏற்கனவே பல பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், விண்வெளி தொழில் பூங்கா, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையம், 'வின்பாஸ்ட்' கார் தொழிற்சாலை என, புதிய தொழில்கள் துவங்கப்பட உள்ளன.
இதனால், பெரிய நிறுவனங்கள் பணம் தராமல் தாமதிக்கும் பிரச்னைக்கு தீர்வு காண துாத்துக்குடியில் ஒரு வசதியாக்கல் குழுவை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, தென் மாவட்ட சிறு நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.