Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ நிப்டி ஏற தயங்குவது போன்ற சூழலே தெரிகிறது

நிப்டி ஏற தயங்குவது போன்ற சூழலே தெரிகிறது

நிப்டி ஏற தயங்குவது போன்ற சூழலே தெரிகிறது

நிப்டி ஏற தயங்குவது போன்ற சூழலே தெரிகிறது

ADDED : ஜூலை 14, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
 உள்நாடு மற்றும் உலக அளவில், பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது என்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், சில்லரை விலை பணவீக்கம் தொடர்ந்து ஐந்து சதவீதத்தை ஒட்டியே பதிவாகி வருவதால், உடனடியாக 'ரெப்போ' வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

 கடந்த ஜூன் மாதம், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், இதுவரை இல்லாத வகையில் சாதனை உச்சமாக 40,608 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 21,262 கோடி ரூபாய் முதலீட்டுடன் எஸ்.ஐ.பி., திட்ட முதலீடுகளும், கடந்த மாதம் புதிய உச்சத்தை எட்டின.

 கடந்த மாதத்துக்கான சில்லரை விலை பணவீக்கம் 5.08 சதவீதமாக இருந்தது. வெப்ப அலை, வழக்கத்தை விட குறைவான பருவமழை ஆகியவற்றின் காரணமாக, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்ததே, இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

 கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் புதுடில்லி தலைநகர் பகுதி மற்றும் மும்பை பெருநகரப் பகுதியில், வீடுகளின் சராசரி விலை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக, 'அனராக்' ரியல் எஸ்டேட் நிறுவனம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 பங்குகள் பிரிவில், நிறுவன ரீதியான முதலீடுகளில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் பங்களிப்பு, கடந்த மாதம் 20.90 சதவீதத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் நிர்வாகத்தின்கீழ் உள்ள பங்குகளின் மதிப்பு, 40.26 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

வரும் வாரம்

 உணவுப் பொருட்களின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம், பயணியர் வாகன விற்பனை, ஏற்றுமதி - -இறக்குமதி வர்த்தகம், அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.

 சில்லறை விற்பனை தரவுகள், கட்டடம் கட்ட வழங்கப்பட்ட அனுமதிகள், வேலை யில்லாத நபர்களின் எண்ணிக்கை போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.

கவனிக்க வேண்டியவை

 கடந்தவாரம் திங்களன்று மூன்று புள்ளி கள் இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 112 புள்ளிகள் ஏற்றத்துடனும்; புதனன்று வர்த்தக நாளின் இறுதியில் 108 புள்ளிகள் இறக்கத்துடனும்; வியாழனன்று எட்டு புள்ளிகள் இறக்கத்துடனும்; வெள்ளியன்று 186 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. நாளின் இடையே அவ்வப்போது இறக்கங்கள் வந்துபோனது.

இது, லாபத்தை வெளியே எடுக்கும் நோக்கத்தில் முதலீட்டாளர்கள் செயல்பட முனைவதனால் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

 வரும் வாரம், நான்கு வர்த்தக தினங்களைக் கொண்ட வாரம். நுாற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 2024--25 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.

செய்திகள், நிகழ்வுகள், காலாண்டு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள், மற்றும் பொருளாதாரம் சார்ந்த தரவுகள் போன்றவையே நிப்டியின் நகர்வை தீர்மானிப்பதாக இருக்கும்.

எனவே, வர்த்தகர்கள் இவற்றின்மீது முழு கவனத்தையும் வைத்து, மிகவும் குறைந்த எண்ணிக்கையில், குறுகிய அளவிலான, நஷ்டத்தைக் குறைக்க உதவும் ஸ்டாப்லாஸ்களை கட்டாயமாக உபயோகித்து, அதிக எச்சரிக்கை யுடன் வர்த்தகம் செய்வதற்கு முயற்சிக்கலாம்.

டெக்னிக்கல் அனாலிசிஸ் அளவீடுகளின்படி பார்த்தால், நிப்டி ஏறுவதற்கு தயங்கும் சூழல் வந்தடைந்துள்ளதைப்போன்ற நிலைமையே தென்படுகிறது.

லாபத்தை வெளியே எடுக்கும் நோக்கத்துடனான விற்பனை அவ்வப்போது வந்து செல்வதாலேயே, வர்த்தக நாளின் இடையிடையே இறக்கங்கள் அவ்வப்போது வந்து போகிறது. இதனை மனதில் வைத்துக்கொண்டே, வர்த்தகர்கள் செயல்படவேண்டும்.

நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்

நிப்டி 24,232, 23,962 மற்றும் 23,790 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 24,682, 24,862 மற்றும் 25,035 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24,412 என்ற அளவிற்கு கீழே செல்லாமல், தொடர்ந்து வர்த்தகமாகிக் கொண்டிருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us