Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/சேமிப்பு திட்டம்/ஓய்வுகால திட்டமிடலில் தவிர்க்க வேண்டிய தவறுகள்

ஓய்வுகால திட்டமிடலில் தவிர்க்க வேண்டிய தவறுகள்

ஓய்வுகால திட்டமிடலில் தவிர்க்க வேண்டிய தவறுகள்

ஓய்வுகால திட்டமிடலில் தவிர்க்க வேண்டிய தவறுகள்

ADDED : அக் 15, 2023 09:07 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள, ஓய்வுகால திட்டமிடலை சரியான முறையில் மேற்கொள்வது அவசியம்.

இளம் வயதினரை பொருத்தவரை பணிக்கு சேர்ந்ததும், ஓய்வுகால திட்டமிடல் பற்றி அதிகம் யோசிக்க வாய்ப்பில்லை. ஓய்வு பெறுவதற்கான காலம் வெகு தொலைவில் இருந்தாலும், மற்ற நிதி இலக்குகளில் கவனம் செலுத்துவது போலவே ஓய்வுகால சேமிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் சேமிப்பு மற்றும் முதலீடு போலவே, ஓய்வுகால திட்டமிடலை ஆரம்பத்திலேயே துவக்குவது அதிக பலனை அளிக்கும். இதன் மூலம் நீண்டகால நோக்கில் கூட்டு வட்டியின் பலனை பெறலாம். ஓய்வுகால திட்டமிடலை சீக்கிரமே துவங்குவதோடு, சரியான முறையிலும் திட்டமிட வேண்டும்.

போதுமான நிதி


ஓய்வுகால திட்டமிடலில் பலரும் செய்யும் தவறு, பி.எப்., என குறிப்பிடப்படும் 'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி' கணக்கு இருந்தால், அது மட்டுமே போதும் என நினைத்து விடுவதாகும்.

பி.எப்., முக்கிய பாதுகாப்பு என்றாலும், அடிப்படையில் இது கடன்சார் முதலீடு என்பதால், அதன் மூலம் சேரும் நிதி போதுமானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு ஓய்வுகாலத்திற்கான நிதியை சேமிக்க வேண்டும் எனில், சமபங்கு அம்சம் அவசியம் தேவை. எனவே, பி.எப்., தவிர வேறு பொருத்தமான ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். மியூச்சுவல் பண்ட்களையும் நாடலாம்.

இளம் வயதில் வளர்ச்சி வாய்ப்புகளை நாடி வேலை மாறுவதும் இயல்பானது. எனினும், புதிய வேலைக்கு மாறும் போது, பழைய வேலையின் பி.எப்., கணக்கை அடிப்படையிலேயே விட்டுவிடுவது ஏற்றதல்ல.

அதிலும் குறிப்பாக, பி.எப்., தொகையை விலக்கிக் கொண்டு, அந்த கணக்கை தொடராமல் இருப்பது பாதகமானது. மாறாக புதிய வேலையில் சேர்ந்ததும், பழைய கணக்கை தொடர வழி செய்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் தொடர் சேமிப்பு மற்றும் கூட்டு வட்டியின் பலனை பெறலாம். ஓய்வு காலத்தில் இது கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்.

சரியான முதலீடு


அதே போல ஓய்வுகால சேமிப்பை தள்ளிப்போடாமல் உடனே துவங்க வேண்டும். ஆரம்ப ஆண்டுகளிலேயே சேமிக்கத் துவங்கினால், சிறிய தொகையாக இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் அதிக பலனை அளிக்கும்.

தாமதமாக துவங்கும் போது அதிக தொகையை ஒதுக்க வேண்டிஇருக்கும். சேமிக்கும் தொகையை சரியாக முதலீடு செய்வதும் முக்கியம்.

வளர்ச்சிக்கு சமபங்கு முதலீடு, பாதுகாப்பிற்கு கடன்சார் முதலீடு என ஏற்ற விகிதத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு காலத்தை நெருங்கும் போது சமபங்கு விகிதத்தை குறைத்துக் கொள்ளலாம்.

பொதுவாக 60 வயது என்பது ஓய்வுகால வயதாகக் கருதப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் அதன் பிறகும் பணி புரியும் நிலை உண்டாகலாம்.

அதே நேரத்தில் அதிகரிக்கும் ஆயுள் காலத்தையும் மனதில் கொள்ள வேண்டும். எப்படி பார்த்தாலும், வயதான காலத்தில் போதுமான தொகை கைவசம் இருக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

முன்கூட்டியே ஓய்வு பெறும் விருப்பம் இருந்தால் அதற்கேற்ப திட்டமிட வேண்டும். முக்கியமாக எதிர்காலத்திற்கு தேவையான தொகையை கணக்கிடும் போது, பண வீக்கத்தின் தாக்கத்தையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.