Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சிறு, குறு தொழில்களுக்கு நிலம் விற்பனை சிட்கோவுக்கு 20 சதவீதம் ஒதுக்குமா சிப்காட்?

சிறு, குறு தொழில்களுக்கு நிலம் விற்பனை சிட்கோவுக்கு 20 சதவீதம் ஒதுக்குமா சிப்காட்?

சிறு, குறு தொழில்களுக்கு நிலம் விற்பனை சிட்கோவுக்கு 20 சதவீதம் ஒதுக்குமா சிப்காட்?

சிறு, குறு தொழில்களுக்கு நிலம் விற்பனை சிட்கோவுக்கு 20 சதவீதம் ஒதுக்குமா சிப்காட்?

UPDATED : ஜூன் 30, 2025 12:13 PMADDED : ஜூன் 29, 2025 08:53 PM


Google News
Latest Tamil News
சென்னை:தமிழகத்தில் தொழில் துவங்க வரும் பெரிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன், அதிக நிலப்பரப்பில் தொழில் பூங்காக்களை தொழில் துறையின் கீழ் இயங்கும், 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைக்கிறது.

அங்குள்ள மனைகள், தொழில் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படுகின்றன.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டைகளை, 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஏற்படுத்துகிறது. இது, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படுகிறது.

சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மனைகள், விற்பனை அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

சிப்காட் தொழில் பூங்காக்களில் தொழில் துவங்கும் பெரிய நிறுவனங்களுக்கு தேவைப்படும் உதிரிபாகங்களை அங்கேயே தயாரித்து விற்பதற்காக, சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க, 20 சதவீத நிலத்தை ஒதுக்குமாறு, அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக, அந்த நிலத்தை சிட்கோவுக்கு, சிப்காட் வழங்க வேண்டும். ஆனால், சிப்காட் நிலத்தை ஒதுக்குவதுஇல்லை என்று புகார் கூறப்படுகிறது.

இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் பொதுச் செயலர் வாசுதேவன் கூறியதாவது:

'சிப்காட்' என்பது பன்னாட்டு மற்றும் பெரிய நிறுவனங்களுக்கானது. அந்நிறுவனங்கள் மொத்தமாக, 100 ஏக்கர், 200 ஏக்கர் என, அதிக பரப்பில் தொழிற்சாலைக்கு இடம் குத்தகைக்கு பெறுவதை செலவினமாக கருதுவர்.

ஆனால், சிறு, குறுந்தொழில்முனைவோர், 10 சென்ட், ஒரு ஏக்கர் என, சிறிய அளவில் இடங்களை வாங்கும்போது, விற்பனை வாயிலாக கிடைத்தால், மூலதனமாக கருதுவர். அந்த இடத்தை அடமானம் வைத்து, வங்கிகளில் கடன் பெறுவது எளிதாகும். இதனால், சிறு நிறுவனங்களுக்கு விற்பனை அடிப்படையில் நிலம் தருவதே சிறந்தது.

இடத்தை விற்பனைக்கு வழங்கினால், பலர் சிறுதொழில் துவங்குவர். இதனால், பெரிய நிறுவனங்களுக்கான உதிரிபாகங்கள், அங்கேயே கிடைக்கும். இறக்குமதி செய்வது தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குத்தகைக்கு வேண்டாம்


சிறுதொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொழிற்பேட்டையில் மனைகளை சிட்கோ விற்கிறது. சில சிப்காட் தொழில் பூங்காக்களில் சிறு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு மனை வழங்கிய நிலையிலும், தொழில் துவங்க ஆர்வம் காட்டவில்லை. சிப்காட்டின் அனைத்து தொழில் பூங்காக்களிலும், சிட்கோவுக்கு கட்டாயம் நிலம் வழங்குவதுடன், அதை விற்பனை அடிப்படையில் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். இதனால், தமிழகத்தில் சிறுதொழில் வளர்ச்சி பெருகும்.இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us