அலைக்கற்றை கட்டணம் தள்ளுபடி? தொலைபேசி நிறுவனங்கள் உற்சாகம் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்
அலைக்கற்றை கட்டணம் தள்ளுபடி? தொலைபேசி நிறுவனங்கள் உற்சாகம் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்
அலைக்கற்றை கட்டணம் தள்ளுபடி? தொலைபேசி நிறுவனங்கள் உற்சாகம் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்
ADDED : மார் 25, 2025 07:14 AM

புதுடில்லி; நாட்டின் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பல ஆயிரம் கோடி ரூபாய் அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணத்தை, மத்திய அரசு தள்ளுபடி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலைக்கற்றை ஏலம் எடுக்கும் நிறுவனங்களிடமிருந்து எஸ்.யு.சி., எனும் அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.
சேமிப்பு
கடந்த 2021 செப்டம்பர் மாதத்துக்கு முன் வரை ஏலம் எடுத்த அலைக்கற்றைக்கு, நிறுவனங்கள் இந்த தொகையை செலுத்த வேண்டும். 2021 செப்டம்பர் 15க்கு பிறகு ஏலம் எடுக்கப்படும் அலைக்கற்றைக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், தற்போது 2021 செப்டம்பர் வரை ஏலம் எடுக்கப்பட்ட அலைக்கற்றைக்கான பயன்பாட்டு கட்டணங்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் நெட்வொர்க் விரிவாக்கப் பணிகள் வலுவாக தொடர, அவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது உறுதியாகும் பட்சத்தில், வோடபோன் ஐடியா, ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பயன்பாட்டு கட்டண பாக்கியை செலுத்த வேண்டியதிருக்காது. மேலும், நாடு முழுதும் இந்நிறுவனங்கள் தங்களின் 5ஜி இணைய சேவையை விரிவுபடுத்தவும் உதவியாக இருக்கும்.
கடனில் சிக்கித் தவித்து வரும் வோடபோன் ஐடியா நிறுவனம், இந்த முடிவின் காரணமாக 8,000 கோடி ரூபாய் வரை சேமிக்க இயலும். தொலைதொடர்பு துறை மற்றும் சம்பந்தப்பட்ட பிற அமைச்சகங்களுடன் இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் டில்லியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சலுகை கிடையாது
இந்நிலையில், அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த நிவாரணம் என்றும், நிர்வாக ரீதியாக ஒதுக்கீடு பெறும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், எலான் மஸ்கின் 'ஸ்டார்லிங்க்' நிறுவனத்துக்கு சேவை வழங்க ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில், அந்நிறுவனம் அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.
தள்ளுபடி வழங்கினால், கடனில் சிக்கி தவித்து வரும் வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு 8,000 கோடி ரூபாய் மிச்சமாகும்!