Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

ADDED : மே 11, 2025 11:27 PM


Google News
Latest Tamil News

பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் முதலீடு ஏப்ரலில் 3 சதவீதம் சரிவு


பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு, கடந்த ஏப்ரலில் 3.20 சதவீதம் சரிந்து, 24,269 கோடி ரூபாயாக இருந்தது என, 'ஆம்பி' எனும் இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரலில் மிட்கேப் பண்டுகளில் நிகர முதலீடு 3.60 சதவீதம் சரிந்து, 3,313.98 கோடி ரூபாயாகவும், ஸ்மால்கேப் பண்டுகளில் 2.30 சதவீதம் சரிந்து 3,999.95 கோடி ரூபாயாகவும் பதிவாகி உள்ளன. இதற்கு மாறாக, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் லார்ஜ் கேப் பண்டுகளில், நிகர முதலீடு 7.80 சதவீதம் அதிகரித்து, 2,671.46 கோடி ரூபாயாக இருந்தது.



கியாவின் முதல் சி.என்.ஜி/. கார் நடப்பாண்டில் அறிமுகம்


கியா நிறுவனம், அதன் முதல் சி.என்.ஜி., காரை நடப்பாண்டிற்குள் அறிமுகப்படுத்த உள்ளதாக நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஹர்தீப் சிங் பிரார் கூறினார்.கரன்ஸ் சி.என்.ஜி., மாடல் காரை தற்போது சோதனை செய்து வருகிறோம். நடப்பாண்டு இறுதிக்குள் இந்த கார் அறிமுகமாகும். கரன்ஸ் கார் மட்டுமே சி.என்.ஜி., எரிபொருளில் வர உள்ளது. சோனெட், செல்டோஸ் உள்ளிட்ட இதர கியா கார்கள் சி.என்.ஜி.,யில் வராது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில், டீசல் கார்களை விட, சி.என்.ஜி., கார்களின் விற்பனை, 7 சதவீதம் அதிகரித்து, 7.87 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.



நுகர்பொருட்கள் விற்பனை மார்ச்சில் 11சதவீதம் வளர்ச்சி


இந்தியாவின் நுகர்பொருட்கள் துறை, கடந்த மார்ச் காலாண்டில் 11 சதவீதம் வளர்ச்சி கண்டு இருப்பதாக, சந்தை ஆராய்ச்சி நிறுவனமான நீல்சன் ஐ.க்யு., வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முந்தைய ஆண்டு இதே காலத்தோடு ஒப்பிடுகையில், அளவுகள் அடிப்படையில் 5.10 சதவீதமும், விலை அடிப்படையில் 5.60 சதவீதமும் அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் நுகர்பொருட்கள் வளர்ச்சி 4 மடங்கு அதிகரித்ததால், சிறு தயாரிப்பாளர்கள் நன்மை அடைந்துள்ளனர். வீடு மற்றும் அழகுசாதன பொருட்கள் நுகர்வு, 5.70 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.



பல்வேறு சேவை கட்டணம் பெடரல் வங்கி உயர்த்துகிறது


ஏ.டி.எம்., பயன்பாட்டு கட்டணம், லாக்கர் வாடகை, கணக்கு பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் அடுத்த மாதம் முதல் உயர்த்தப்படுவதாக, பெடரல் வங்கி அறிவித்துள்ளது.இதன்படி, பெடரல் வங்கி ஏ.டி.எம்.,களில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் இல்லை. பிற வங்கி ஏ.டி.எம்.,களை மாதம் ஐந்து முறை இலவசமாக பயன்படுத்தலாம். இதன் பின், பணம் எடுக்க 23 ரூபாயும்; இருப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு 12 ரூபாயும் வசூலிக்கப்படும். போதிய இருப்பு இல்லாத காரணத்தால் ரத்தாகும் பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us