'இந்திய பொம்மைகள் தரம் உலக சராசரியைவிட மேலானவை'
'இந்திய பொம்மைகள் தரம் உலக சராசரியைவிட மேலானவை'
'இந்திய பொம்மைகள் தரம் உலக சராசரியைவிட மேலானவை'
ADDED : ஜூன் 18, 2025 12:55 AM

புதுடில்லி:பொம்மைகளுக்கான இந்திய தரநிலைகள், உலகளாவிய தரநிலைகளை விடச் சிறந்தவை என்பதால், ஏற்றுமதிக்கு பெரிதும் உதவுகின்றன என, பி.ஐ.எஸ்., மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மும்பை இந்திய தரநிலைகள் ஆணையத்தின் மூத்த அதிகாரி அத்புத் சிங் கூறியதாவது:
பொம்மைகளுக்கான இந்திய தரநிலைகள், உலக சராசரியைவிட சிறந்தவை. இது உள்நாட்டு உற்பத்தியாளர்கள், தங்களின் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு உதவுகின்றன. சமீபத்திய புள்ளி விபரங்களின்படி, இந்தியாவில் 1,640 பி.ஐ.எஸ்., சான்றளிக்கப்பட்ட பொம்மை தொழில்கள் உள்ளன.
இதில், 1,165 உரிமங்கள் மின்னணு அல்லாத பொம்மை தயாரிப்புகளுக்கும்; 475 உரிமங்கள் மின்னணு பொம்மை தயாரிப்புகளுக்குமானவை. ஜி.டி.ஆர்.ஐ.,யின் அறிக்கையின்படி, இந்தியாவின் பொம்மை ஏற்றுமதி, கடந்த 2023 - 24ல் 1,295 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1,308 கோடி ரூபாயாக இருந்தது.
பொம்மைகளுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆணையை, கடந்த 2020ம் ஆண்டு மத்திய தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டது. இது கடந்த 2021 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது.
தரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து பொம்மைகளும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும், இறக்குமதி செய்யப்பட்டாலும், பி.ஐ.எஸ்.,சின் ஏழு குறிப்பிட்ட தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.