10 மாத உச்சம் தொட்ட சேவைகள் துறை வளர்ச்சி
10 மாத உச்சம் தொட்ட சேவைகள் துறை வளர்ச்சி
10 மாத உச்சம் தொட்ட சேவைகள் துறை வளர்ச்சி
ADDED : ஜூலை 04, 2025 12:00 AM

புதுடில்லி:புதிய ஆர்டர்கள் அதிகரித்ததன் காரணமாக, நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் அதிகரித்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மே மாதத்தில் 58.80 புள்ளிகளாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 60.40 புள்ளிகளாக அதிகரித்து, 10 மாத உச்சத்தை எட்டியுள்ளது. இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், வளர்ச்சியையும்; குறைந்தால் சரிவையும் குறிக்கும்.
புதிய ஆர்டர்கள், குறிப்பாக உள்நாட்டு ஆர்டர்கள் அதிகரித்ததே வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஏற்றுமதி ஆர்டர்களும் வளர்ச்சி கண்டுள்ளன.
உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வைக் காட்டிலும் விற்பனை விலை அதிகரிப்பால், நிறுவனங்கள் கூடுதல் லாபம் ஈட்டியுள்ளன. விற்பனை உயர்வால் பணியமர்த்தல்களும் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
இதனிடையே, தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் கூட்டு வளர்ச்சியைக் குறிக்கும் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மாதம் 61 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது, கடந்த மே மாதத்தில் 59.30 புள்ளிகளாக இருந்தது.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.