1,050 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்ய திட்டம்
1,050 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்ய திட்டம்
1,050 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்ய திட்டம்
ADDED : ஜூன் 06, 2025 11:56 PM

புதுடில்லி:எத்தனால் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் அளவை, 947 கோடி லிட்டரில் இருந்து, 1,050 கோடி லிட்டராக அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.
பெட்ரோல் எத்தனால் கலப்பு திட்டத்தின் கீழ், வரும் அக்டோபருக்குள், 18 சதவீதத்தையும், 2025--26ம் ஆண்டுக்குள் 20 சதவீதத்தையும் எட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், 2024 நவ., - 2025 ஏப்ரல் வரை, பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் 18.50 சதவீதத்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில், வரும் வினியோக ஆண்டில், 20 சதவீத எத்தனால் கலப்பை எட்ட, இந்தியாவுக்கு ஆண்டுக்கு 1,016 கோடி லிட்டர் எத்தனால் தேவைப்படும்.
கடந்த மாதம் மத்திய அரசு இந்திய உணவு கழகத்தின் மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக 28 லட்சம் டன் அரிசியை எத்தனால் உற்பத்திக்கு ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்தது. இதன்படி, 2024--25ம் வினியோக ஆண்டில், வழக்கமான 24 லட்சம் டன் அரிசியுடன், கூடுதல் ஒதுக்கீடு சேர்த்து 52 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது.
எனவே, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், கூடுதலாக, 50 கோடி லிட்டர் எத்தனாலுக்கு பதிலாக, 28 லட்சம் டன் அரிசியில் இருந்து உற்பத்தியாகும் 130 கோடி லிட்டர் எத்தனால் கேட்கலாம் என கூறப்படுகிறது.