வருமான வரி தாக்கலில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
வருமான வரி தாக்கலில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
வருமான வரி தாக்கலில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
ADDED : மே 11, 2025 08:38 PM

சரியான படிவத்தை தேர்வு செய்வது முதல் சிறிய தவறுகளை தவிர்ப்பது வரை, வருமான வரி தாக்கலில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
வருமான வரி தாக்கலுக்கான காலம் துவங்கியுள்ள நிலையில், வரி தாக்கல் செய்பவர்கள், குறிப்பாக ஊதியம் பெறுபவர்கள் மற்றும் பிரீலான்சர்கள் படிவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் அடிக்கடி செய்யப்படும் தவறுகள் உள்ளிட்டவற்றை அறிந்திருப்பது அவசியம்.
கவனக்குறைவாக செய்யப்படும் சிறிய தவறுகள் கூட, கால தாமதத்தை அல்லது வருமான வரி நோட்டீஸ் பெறக்கூடிய நிலையை உண்டாக்கலாம். வருமான தகவல்களை சரி பார்ப்பது, முக்கிய விபரங்களை விடுபடாமல் இருப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
சரியான படிவம்
வருமான வரி தாக்கல் செய்யும் போது வழக்கமாக பலரும் செய்யும் தவறு, சரியான படிவத்தை தேர்வு செய்ய தவறுவது தான். ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற வருமான வரி தாக்கல் படிவம் இருப்பதால், மேலும் இந்த ஆண்டு வரி தாக்கல் செய்பவர்கள் பணியை எளிதாக்குவதற்காக மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
எனவே, வரி தாக்கல் செய்வதற்கு முன், பொருத்தமான படிவத்தை சரியாக தேர்வு செய்ய வேண்டும். அனைத்து விதமான வருமானங்களையும் குறிப்பிட மறப்பது, பரவலாக செய்யப்படும் இன்னொரு தவறாக அமைகிறது.
சேமிப்பு கணக்கு வட்டி போன்ற சிறிய வருமானங்களை பலரும் தவிர்த்து விடுகின்றனர். இவை கணக்கில் வராது என நினைக்கின்றனர்.
ஆனால், இவை வரி விதிப்புக்கு உட்பட்டவை என்பதால், கணக்கில் காட்டப்பட வேண்டும். கழிவுகள் பொருந்தும் என்றாலும், இந்த விபரத்தை குறிப்பிடுவது அவசியம். அதே போல ஊக்கத்தொகை வருமானம், வட்டி வருமானம் ஆகியவற்றையும் மறக்காமல் குறிப்பிடுவது, வருமான தகவல் அறிக்கையில் உள்ள தகவல்களோடு வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
தகவல் உறுதி
மேலும், பொருந்தக்கூடிய கழிவுகள் மற்றும் பிடித்தங்களையும் சரியாக அறிந்திருக்க வேண்டும். பழைய வருமான வரி முறையை தேர்வு செய்தால், இதில் கூடுதல் கவனம் தேவை. வரி தாக்கலில் தெரிவிக்கும் தகவல்களுக்கு தேவையான ஆவணங்களையும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
வரி தாக்கல் செய்யும் முன், அதில் இடம் பெற்றுள்ள தகவல்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்து உறுதி செய்ய வேண்டும். தகவல்களில் வேறுபாடு இருந்தால், அது தொடர்பான விளக்கம் கேட்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. முதலிலேயே இவற்றை சரி பார்ப்பது நல்லது.
புதிய வருமான வரி முறைக்கு பதிலாக, பழைய முறையை தேர்வு செய்வதற்கான விரிவான விளக்கம் உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன. இந்த புதிய மாற்றங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவை எனில், இது தொடர்பாக தொழில் முறை உதவியை நாடுவது ஏற்றது. வரி தாக்கல் செய்யும் போது, உரிய கவனம் செலுத்துவது தவறுகளை தவிர்க்க உதவும்.
எனினும், ஏதேனும் பிழை இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், திருத்தங்களோடு மறு தாக்கல் செய்யும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், மறு தாக்கல் செய்யவும் காலக்கெடு இருப்பதை உணர வேண்டும். இதற்கு நிபந்தனைகளும் பொருந்தும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும், உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட தவறு எனில், அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதையும் அறிந்திருக்க வேண்டும்.