வர்த்தக அழைப்பு எண்களுக்கும் கே.ஒய்.சி., கட்டாயம் தொல்லை தரும் அழைப்புகள் குறையும்
வர்த்தக அழைப்பு எண்களுக்கும் கே.ஒய்.சி., கட்டாயம் தொல்லை தரும் அழைப்புகள் குறையும்
வர்த்தக அழைப்பு எண்களுக்கும் கே.ஒய்.சி., கட்டாயம் தொல்லை தரும் அழைப்புகள் குறையும்
ADDED : ஜூன் 19, 2025 12:15 AM

புதுடில்லி,:இணைய வழியில், வர்த்தக ரீதியாக மொத்த அழைப்புகள் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களுக்கும் கே.ஒய்.சி., நடைமுறை கட்டாயம் என, மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்து உள்ளது.
வர்த்தக நிறுவனங்கள், நாடு முழுதும் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதற்கும், விளம்பரம் செய்வதற்கும் கே.ஒய்.சி., விதிமுறைகள் உள்ளிட்ட சிலவற்றில் முன்னர் தளர்வுகள் அளிக்கப்பட்டன.
ஆனால், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட அறிவிக்கையில், வர்த்தக இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து சிம் கார்டுகளுக்கும் கே.ஒய்.சி., நடைமுறை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மொத்த இணைப்புகள், பயனர்களால் அடையாளம் காண முடியாதவை என்பதால், கே.ஒய்.சி.,முறையாகப் பின்பற்றப்படவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சில உரிமம் பெற்ற நிறுவனங்கள், வர்த்தக இணைப்புகளின் கீழ் கே.ஒய்.சி., விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல், இணைய வழியில் மொத்தமாக அழைப்புகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பதாக, கவனத்துக்கு வந்துள்ளது.
இதற்கு, 2023ல் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள், மொபைல் வாயிலாக தொலைத்தொடர்பு சேவை வழங்குவோருக்கு மட்டும் பொருந்தும் என வாதம் முன்வைக்கப் படுகிறது.
இந்த விவகாரத்தில், இணைய வழியில், மொபைல் எண் வரிசையை பயன்படுத்தி அழைப்பு மேற்கொள்ள உரிமம் பெற்றவர்களுக்கும் சிம் கார்டு, ஐ.எம்.எஸ்.ஐ., போன்றவை பொருந்தும். எனவே, கே.ஒய்.சி., நடைமுறைகளை, வர்த்தக அழைப்பு களுக்கும் பின்பற்றுவது கட்டாயமாகும்.
சுற்றறிக்கை வெளியான நாளில் இருந்து , 90 நாட்களுக்குள் அனைத்து இணையவழி தொலைத்தொடர்பு இணைப்புகளும் இதனை கடைப்பிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், விதிமீறலாக கருதப்பட்டு நடவடிக்கைக்கு எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.