உயர் கல்விக்கு சேமிக்க மியூச்சுவல் பண்ட் ஏற்றதா?
உயர் கல்விக்கு சேமிக்க மியூச்சுவல் பண்ட் ஏற்றதா?
உயர் கல்விக்கு சேமிக்க மியூச்சுவல் பண்ட் ஏற்றதா?
ADDED : ஜூன் 15, 2025 09:09 PM

பிள்ளைகள் உயர் கல்விக்கான நிதியை சேமிக்க மியூச்சுவல் பண்ட் முதலீட்டை நாடுவது பற்றி ஒரு கண்ணோட்டம்.
பெற்றோரில் பலர் பிள்ளைகளின் உயர் கல்விக்கு தேவையான நிதியை உருவாக்க சேமிப்பது அவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர். உயர் கல்விக்கான சேமிப்பு என்று வரும் போது பெரும்பாலானோர், பி.பி.எப்., அல்லது வைப்பு நிதி போன்ற பாரம்பரியமான வழிகளை நாடுகின்றனர்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் அல்லது கிசான் விகாஸ் பத்திரம் போன்றவற்றிலும் முதலீடு செய்கின்றனர். எனினும், சரியான வழிகாட்டுதல் மற்றும் திட்டமிடலுடன் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதும் ஏற்றதாக இருக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
கால அளவு
உயர் கல்விக்கான சேமிப்பை மேற்கொள்ளும் போது, கல்வி பணவீக்கம் காரணமாக செலவு அதிகரிப்பது பெற்றோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக அமைகிறது. தற்போது கல்வி பணவீக்கம், அதாவது கல்வி செலவுகள் அதிகரிப்பது 8 முதல் 10 சதவீதமாக இருப்பதாக கருதப்படுகிறது.
எனவே, பாரம்பரிய முதலீட்டை மேற்கொள்வதோடு, பணவீக்கத்தை எதிர்கொள்ள உதவும் சமபங்கு நிதிகள் முதலீட்டையும் கொண்டிருப்பது ஏற்றதாக இருக்கும் என்கின்றனர். இது, தேவையான கல்வி நிதியை உருவாக்க உதவும் என்றும் கருதப்படுகிறது.
உயர் கல்விக்கான நிதி, பிள்ளைகளின் 18 வயதில் அல்லது முதுகலை படிப்பு எனில் 21 வயதில் தேவைப்படலாம். இதற்கு பல ஆண்டுகள் சேமித்து முதலீடு செய்வது அவசியம். இந்த காலம் மியூச்சுவல் பண்ட் முதலீட்டிற்கு ஏற்றதாக அமையும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
கல்வி கடன்
பாரம்பரிய முதலீடு மற்றும் மியூச்சுவல் பண்ட்கள் என இரண்டிலும் முதலீடு செய்யலாம். ஏழு ஆண்டுகளுக்கு மேல் முதலீடு காலம் இருந்தால், மியூச்சுவல் பண்ட்களில் சமபங்கு நிதிகளில் 70 சதவீதம் முதலீடு மற்றும் பாரம்பரிய வழிகளில் 30 சதவீத முதலீடு செய்யலாம் என்கின்றனர். முதலீடு காலம் அதிகமாக இருக்கும் போது சமபங்குகளில் அதிகம் முதலீடு செய்யலாம்.
முதலீடு செய்யும் காலம் ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக இருக்கும் போது, மியூச்சுவல் பண்ட் மற்றும் பாரம்பரிய முதலீட்டில் 50க்கு 50 எனும் வழியை பின்பற்றலாம் என கருதுகின்றனர். கல்வி செலவுக்கான தேவைக்கு ஏற்ப பொருத்தமான நிதிகளை தேர்வு செய்ய வேண்டும்.
இண்டக்ஸ் நிதிகள், பிளக்சி கேப் நிதிகள் உள்ளிட்ட பிரிவு நிதிகளை பரிசீலிக்கலாம். எஸ்.ஐ.பி., எனப்படும் சீரான முதலீடு வழியையும் நாடலாம். தேவை எனில் தொழில்முறை ஆலோசனையையும் நாடலாம். நிதிகளின் இடர் அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கல்வி கடன் வசதியை நாடும் வாய்ப்பு இருந்தாலும், உயர் கல்விக்கு என தனியே திட்டமிட்டு சேமிப்பது அவசியம். கல்வி கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் இந்த நிதி பாதுகாப்பாக அமையும். கல்வி கடன் பிள்ளைகளுக்கு பொறுப்பை உண்டாக்கும் என்றாலும், கல்வி கட்டணம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இதற்கான சேமிப்பு இருப்பது, நிலைமையை சமாளிக்க உதவும்.
கடன் சுமையை குறைக்கவும் உதவும். எனவே, முன்னதாகவே திட்டமிட்டு சேமிப்பை துவங்குவது எதிர்காலத்தில் கைகொடுக்கும். வெளிநாட்டில் உயர் கல்வியை மேற்கொள்ள விரும்பினால், அதற்கேற்ப திட்டமிடுவதும் அவசியம்.