அமெரிக்க ஜவுளி சந்தையில் உயர்கிறது இந்தியாவின் பங்கு
அமெரிக்க ஜவுளி சந்தையில் உயர்கிறது இந்தியாவின் பங்கு
அமெரிக்க ஜவுளி சந்தையில் உயர்கிறது இந்தியாவின் பங்கு
ADDED : ஜூன் 16, 2025 12:43 AM

கோவை:நடப்பாண்டின் முதல் 4 மாதங்களில், அமெரிக்க ஜவுளி இறக்குமதி சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 0.60 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்தம் 7.60 சதவீத பங்களிப்புடன் இதுவரை இல்லாத அதிகபட்சத்தை எட்டிஉள்ளது.
நடப்பாண்டின் ஜன., ஏப்., வரையிலான காலகட்டத்தில், அமெரிக்கா 2.23 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி இறக்குமதி செய்துள்ளது. இதில், வியட்நாம் 19 சதவீத பங்களிப்புடன் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது.
சீனா 17, வங்கதேசம் 11 சதவீதத்தை தொடர்ந்து 7.60 சதவீதத்துடன் இந்தியா, 4வது இடம் பிடித்து உள்ளது.
முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், 2.01 லட்சம் கோடி ரூபாயாக இருந்த அமெரிக்க ஜவுளி இறக்குமதி சந்தையில், இந்தியா 0.60 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
அதேவேளையில், சீனா 1 சதவீத சந்தையை இழந்துள்ளது. சீனாவின் சரிவு, மற்ற நாடுகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. வங்கதேசம் 1.30 சதவீதம், கம்போடியா 0.50 சதவீதமும் வளர்ச்சியடைந்து உள்ளன.
இந்தியாவின் 0.60 சதவீத வளர்ச்சி என்பது, ஆண்டுக்கு சுமார் 4,000 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக வர்த்தகத்தை அதிகரிப்பதாக இருக்கும்.
நீண்ட கால அடிப்படையில், இந்த வளர்ச்சி இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என, இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, இந்தியன் டெக்ஸ்பிரனேர்ஸ் பெடரேஷன் (ஐ.டி.எப்.,) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
அமெரிக்க சந்தையில் 7.60 சதவீத பங்களிப்புதான், இதுவரை இந்தியா வின் அதிகபட்சம் என கருதுகிறோம். சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள், மற்ற நாடுகளுக்கு சாதகமாகிஉள்ளது.
இந்தியா -- அமெரிக்கா இடையேயான, தாராள வர்த்தக ஒப்பந்த பேச்சின் முடிவில், நமக்கான வரிவிகிதம் 0 முதல் 10 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனா மீதான வரியை விட குறைவு.
எனவே, உடனடியாக அதிவேக மாற்றங்கள் இல்லாவிட்டாலும், நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுக்கு, இது பெரும் சாதகமாக இருக்கும். ஏனெனில் 1 சதவீத வளர்ச்சி என்பதே சுமார் 7,000 கோடி ரூபாய் வர்த்தகமாகும். இந்த சாதகமான போக்கு தொடரும் என நம்புகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.