Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ஜி.பி.எஸ்., முறையில் சுங்க கட்டணம்: சரக்கு வாகனங்களுக்கு நடைமுறை

ஜி.பி.எஸ்., முறையில் சுங்க கட்டணம்: சரக்கு வாகனங்களுக்கு நடைமுறை

ஜி.பி.எஸ்., முறையில் சுங்க கட்டணம்: சரக்கு வாகனங்களுக்கு நடைமுறை

ஜி.பி.எஸ்., முறையில் சுங்க கட்டணம்: சரக்கு வாகனங்களுக்கு நடைமுறை

ADDED : ஜன 26, 2024 02:25 AM


Google News
Latest Tamil News
சென்னை: ஜி.பி.எஸ்., முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியை, மார்ச் மாதத்திற்குள் சரக்கு வாகனங்களுக்கு நடைமுறைப்படுத்த ஏற்பாடு துவங்கிஉள்ளது.

நாடு முழுதும் ஒரு லட்சம் கி.மீ.,க்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு அனைத்து மாநிலங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் இலகுரக மற்றும் கனரக வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்வதற்கு 800க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.

ரொக்க பரிவர்த்தனை வாயிலாக முன்பு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டதால், கட்டணம் செலுத்துவதற்கு குறைந்தபட்சம் 8 நிமிடங்கள் வரை, வாகனங்கள் காத்திருக்கவேண்டிய நிலை இருந்தது.

இதையடுத்து, 2021ம் ஆண்டு 'பாஸ்டேக்' எனப்படும் மின்னணு முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடைமுறைப்படுத்தியது.

இதன் வாயிலாக, சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கான காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாக குறைந்துள்ளது. பல வாகனங்கள், பாஸ்டேக் அட்டைகளை பயன்படுத் தாததால், சுங்கச்சாவடிகளில் நெரிசல் தொடர்கிறது.

மேலும் ஒரே வாகனத்திற்கான பாஸ்டேக் அட்டைகளை, மற்ற வாகனங்களில் பயன்படுத்தி முறைகேடு நடப்பதும் அதிகரித்து வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜி.பி.எஸ்., முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அறிமுகம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது.

இதற்காக, சுங்கச்சாவடிகளில், தானியங்கி முறையில் வாகனங்களின் நம்பர் பிளேட்களை கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே ஜி.பி.எஸ்., கருவியும் பொருத்தப்பட உள்ளது.

இதனை பயன்படுத்தி வாகனங்கள் பயணித்த துாரம் கணக்கிடப்பட்டு, தானியங்கி முறையில் சுங்க கட்டணம் வாகன உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து வசூலிக்கப்பட உள்ளது. இந்த நடைமுறையை மார்ச் மாதம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அனைத்து வாகனங்களுக்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த காலதாமதம் ஆகும். எனவே, மார்ச் மாதத்திற்குள் சரக்கு வாகனங்களுக்கு முழுமையாக ஜி.பி.எஸ்., முறையில் சுங்க கட்டணம் வசூலிப்பு நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.

இதற்கான பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 58 சுங்கச்சாவடிகளில், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us