Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வான்வெளி, ராணுவ தளவாட தொழிலில் ரூ.75,000 கோடி முதலீட்டை ஈர்க்க திட்டம் முதல்வர் ஸ்டாலின் தகவல்

வான்வெளி, ராணுவ தளவாட தொழிலில் ரூ.75,000 கோடி முதலீட்டை ஈர்க்க திட்டம் முதல்வர் ஸ்டாலின் தகவல்

வான்வெளி, ராணுவ தளவாட தொழிலில் ரூ.75,000 கோடி முதலீட்டை ஈர்க்க திட்டம் முதல்வர் ஸ்டாலின் தகவல்

வான்வெளி, ராணுவ தளவாட தொழிலில் ரூ.75,000 கோடி முதலீட்டை ஈர்க்க திட்டம் முதல்வர் ஸ்டாலின் தகவல்

ADDED : அக் 08, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
சென்னை:''தமிழக ராணுவ தொழில் வழித்தட திட்டத்தை செயல்படுத்த துவங்கியதில் இருந்து, இதுவரை, 23,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனமான, 'டிட்கோ' மற்றும் பிரான்சின் பி.சி.ஐ., ஏரோஸ்பேஸ், தமிழக ஏரோஸ்பேஸ் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு இணைந்து, வான்வெளி மற்றும் ராணுவ துறைக்கான, 'ஏரோடிப்கான் 2025' சர்வதேச மாநாட்டை, வரும் 9ம் தேதி வரை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்துள்ளன. அதை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்து பேசினார்.

அவர் கூறியதாவது:

நாட்டில், 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன், இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி பிடித்திருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். எதை செய்தாலும், அதை சிறப்பாக செய்வதால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது.

இதில், முக்கியமானது ராணுவத் துறை. தமிழக ராணுவ தொழில் வழித்தட திட்டம், இந்த துறை சார்ந்த வளர்ச்சிக்கு, ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

இந்த துறையில், நாட்டின் உற்பத்தி மையமாக தமிழகம் மாற வேண்டும். உயர்தர, 'ஜெட் இன்ஜின்' பாகங்களில் இருந்து, 'ட்ரோன்'கள் உற்பத்தி நடக்கிறது. விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி பிரிவுகள் இதில் இருக்கின்றன.

தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தில், கோவை வாரப்பட்டியில், 360 ஏக்கரில் தொழில் பூங்கா; சூலுாரில், விமான பழுதுபார்த்தல், பராமரிப்பு, ஒருங்கிணைப்பு பணிக்கு, 200 ஏக்கரில் வான்வெளி பூங்கா ஆகியவை அமைக்கப்படுகின்றன.

தமிழக ராணுவ தொழில் வழித்தட திட்டத்தை செயல்படுத்த துவங்கியதில் இருந்து, இதுவரை, 23,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருக்கின்றன.

அதில், 5,000 கோடி ரூபாய் திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு உள்ளன. வரும், 2032க்குள், 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழித்தடத்தில் ஒவ்வொரு நகரமும் தனித்துவமாக இருக்கும். ஆராய்ச்சி மற்றும் கடற்படை அமைப்புக்கு மையமாக சென்னை; நுண்பொறியியல் திறனுக்கான மையமாக கோவை; வான்வெளி மற்றும் மின்னணு தொழில்நுட்ப மையமாக ஓசூர்; உயர்தொழில்நுட்ப பொருட்கள் மையமாக சேலம்; கனரக இயந்திர உற்பத்தி மையமாக திருச்சி ஆகியவை இருக்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சியில், டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, 'போயிங், ஏர்பஸ், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்,' நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உட்பட, 87 நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள், கண்டுபிடிப்புகள் கொண்ட அரங்குகளை அமைத்துள்ளன.

வளர்ச்சிக்கு இது உதவும் தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், வான்வெளி, ராணுவ தொழில் துறைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்த விபரங்களை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தெரிவிக்க, இந்த மாநாடு நடத்தப்படுகிறது. உற்பத்தியாளர், வாங்குபவர் நேரடியாக சந்தித்து, தங்களின் தேவைகளை பகிர்ந்து கொள்வதால், இரு தரப்புக்கும் வளர்ச்சி ஏற்படும். - சந்தீப் நந்துாரி, மேலாண் இயக்குநர், 'டிட்கோ'



சிறுதொழில்களும் பயன்பெறும்
தமிழகத்தில் வான்வெளி, ராணுவ தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை, உலகின் பெரிய நிறுவனங்களுடன் இணைக்க, இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில், 19 நாடுகளில் இருந்து, 300 பெரிய நிறுவனங்கள் வந்துள்ளன. ஒரு நிறுவனத்திற்கும், மற்றொரு நிறுவனத்திற்கும் தொடர்பை ஏற்படுத்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பல நாடுகளில் இருந்து வந்துள்ள பெரிய நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்படும். இதற்காக, 5,558 கூட்டங்கள் நடத்தப்படும். - ராஜா தமிழக தொழில் துறை அமைச்சர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us