மின் சிக்கனத்துக்கான பிரசாரம் சென்னையிலிருந்து துவக்கம்
மின் சிக்கனத்துக்கான பிரசாரம் சென்னையிலிருந்து துவக்கம்
மின் சிக்கனத்துக்கான பிரசாரம் சென்னையிலிருந்து துவக்கம்
ADDED : மே 11, 2025 11:22 PM

புதுடில்லி:கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, நாடெங்கும் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில், சென்னையை மையமாகக் கொண்டு, தேசிய அளவில் மின்சார சேமிப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசாரத்தை, மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எரிசக்தி திறன் பணியகம் துவங்கியுள்ளது.
இதுகுறித்து எரிசக்தி திறன் பணியகம் தெரிவித்துள்ளதாவது:
சென்னை, 1.35 கோடி குடியிருப்புகள், எண்ணற்ற வணிக நிறுவனங்கள் என அதிக மின் நுகர்வு கொண்ட நகரமாக விளங்குகிறது. எனவே, நாட்டின் காலநிலை இலக்குகளை அடைவதிலும், மின்சார தேவையை கட்டுப்படுத்துவதிலும் சென்னைக்கு முக்கிய பங்கு உள்ளது.
இந்த பிரசாரத்தின் வாயிலாக, ஏ.சி.,யை பொறுப்புடன் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய அங்கமாக, வீடு மற்றும் அலுவலகங்களில் ஏ.சி.,யை நிலையாக 24 டிகிரி வெப்ப நிலையிலேயே பராமரிக்க வலியுறுத்தப்படுகிறது.
இதன் வாயிலாக மின்சாரத்தை சேமிப்பது மட்டுமல்லாமல்; மாதாந்திர மின் கட்டணத்தை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கவும் முடியும்.
உதாரணமாக, ஏ.சி.,யை 20 டிகிரி வெப்பநிலைக்கு பதிலாக 24 டிகிரி வெப்பநிலையில் பராமரித்தால், மாதாந்திர மின் கட்டணத்தில் 24 சதவீதம் வரை சேமிக்கலாம், கார்பன் உமிழ்வையும் குறைக்கலாம். இதனால், ஏ.சி.,யின் ஆயுள் காலமும் அதிகரிக்கும். ஏ.சி.,யுடன் சேர்த்து மின்விசிறியை குறைந்த வேகத்தில் பயன்படுத்தினால், அறைகளில் குளிர்ச்சி நீடிக்கும்.
அதிக ஏ.சி., நுகர்வு இடங்களான ஷாப்பிங் மால் கள், ஐ.டி., பூங்காக்கள், உணவகங்கள், விமான நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும்.
ஏ.சி., வெப்பநிலையை ஒரு டிகிரி அதிகரிப்பதன் வாயிலாக, மின் நுகர்வை ஆறு சதவீதம் வரை குறைக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துஉள்ளது.