'பேம் 2' திட்டத்துக்கு கூடுதலாக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு
'பேம் 2' திட்டத்துக்கு கூடுதலாக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு
'பேம் 2' திட்டத்துக்கு கூடுதலாக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : ஜன 04, 2024 12:34 AM

புதுடில்லி: மத்திய நிதி அமைச்சகம், 'பேம் 2' திட்டத்திற்கு கூடுதலாக, 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக, 'பேம் 1' திட்டம், 895 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2015ம் ஆண்டில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன.
இதை தொடர்ந்து, இத்திட்டத்தின் இரண்டாம் பதிப்பாக, 'பேம் 2', 10,000 கோடி ரூபாய் மதிப்பில், ஏப்ரல் 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் வரும் மார்ச் 31ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 10,000 கோடி ரூபாய் நிதியில், இதுவரை கிட்டத்தட்ட 8,948 கோடி ரூபாயை அரசு பயன்படுத்திஉள்ளது.
வலுவான மின்சார வாகன விற்பனையின் காரணமாக, மார்ச் 2024ல் இத்திட்டம் முடிவடைவதற்கு முன்பாக, இதற்கான நிதி தீர்ந்துவிடும் என்ற அச்சம் சந்தையில் நிலவுகிறது.
இதையடுத்து, இதற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை, 10,000 கோடி ரூபாயில் இருந்து, 11,500 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று முன்மொழியப்பட்டது.
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் இத்திட்டத்தின் நோக்கங்களை கருதி, மத்திய நிதி அமைச்சகம், தற்போது இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன்படி, கூடுதலாக 1,500 கோடி ரூபாய் நிதி அளிக்க உள்ளது.
இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து, இத்திட்டத்தால் பயனடையும் வாகனங்களுக்கான எண்ணிக்கையையும், 15.60 லட்சத்தில் இருந்து, 17.40 லட்சமாக, அரசு உயர்த்தியுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், 50,000 மின்சார பேருந்துகளை அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டு வருவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டம், அரசின் 'பேம் 3' திட்டத்திற்கு மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பேம் 3 திட்டம் உருவாக்கம் குறித்து அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.