நல வாரிய கூட்டம் நடத்தாததால் அரசு மீது வணிகர்கள் அதிருப்தி
நல வாரிய கூட்டம் நடத்தாததால் அரசு மீது வணிகர்கள் அதிருப்தி
நல வாரிய கூட்டம் நடத்தாததால் அரசு மீது வணிகர்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 15, 2024 09:46 PM

சென்னை:வணிகர் நல வாரியம் அமைத்து, அடுத்த மாதத்துடன் ஓராண்டுகிறது. இதுவரை ஒரு கூட்டம் கூட நடத்தப்படாததால், தமிழக அரசின் மீது, வணிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் மளிகை கடை, உணவகம் உள்ளிட்ட அனைத்து வியாபார நடவடிக்கைகளிலும், 37 லட்சம் வணிகர்கள் உள்ளனர். அவர்களின் பிரச்னை களை கேட்டறிந்து, தீர்வு காண தமிழக அரசு, வணிகர் நல வாரியம் அமைத்துள்ளது. அதன் சார்பில், வணிகர்களுக்கு நிதியுதவி உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வணிகர் நல வாரிய தலைவராக முதல்வர், துணைத் தலைவராக வணிக வரித் துறை அமைச்சர் மற்றும் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக, துறை செயலர் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள் உள்ளனர்.
அலுவல் சாரா உறுப்பினர்களாக, வணிகர் சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய, 30 பேரை, அரசு, 2023 ஜூலையில் நியமித்தது. இதுவரை, ஒருமுறை கூட வணிகர் நல வாரிய கூட்டம் நடத்தப்படவில்லை. இதற்கு, வணிகர்களிடம் அதிருப்தி எழுந்து உள்ளது.
இதுகுறித்து, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:
வணிகர் நல வாரியத்தில் உயிரிழந்த வணிகர்களுக்கு, மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதை, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குமாறும்; பெருவெள்ளம் உள்ளிட்ட பேரிடரில் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு நிதியுதவி செய்யுமாறும் அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
வணிகர்களை கை துாக்கிவிட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கூட்டம் நடத்துமாறு அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தேர்தல் முடிந்ததும் நடத்துவதாகக் கூறினர். இதுவரை நடத்தவில்லை. எனவே, விரைவில் வாரிய கூட்டத்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.