ADDED : ஜூன் 23, 2024 12:49 AM

சென்னை:மாநிலம் முழுதும் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு, இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில், 'மினி டைடல் பார்க்' கட்டி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
அதன்படி, தஞ்சை பிள்ளையார்பட்டியில், 55,000 சதுர அடியில், 'டைடல் நியோ' கட்டடம் கட்டப்பட்டு, விரைவில் துவக்கப்பட உள்ளது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையை போல் கோவையிலும் டைடல் பார்க் உள்ளது. சமீபத்தில் விழுப்புரத்தில் மினி டைடல் பார்க் திறக்கப்பட்டது.
தஞ்சையில் வேளாண் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழில்கள் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அங்கு 'டைடல் நியோ' கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் விரைவில் துவக்கி வைக்க உள்ளார்.
தற்போது, அங்கு ஒரு தனியார் ஐ.டி., நிறுவனம் தொழில் துவங்க முன்பதிவு செய்துள்ளது. மொத்தம், 10 நிறுவனங்களுக்கு மேல் தொழில் துவங்க இட வசதி உள்ளது.
இந்த டைடல் பார்க்கால், திருவாரூர், நாகையையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.