'குவான்ட் மியூச்சுவல் பண்டு' விவகாரத்தில் 'செபி' விசாரணை துவங்கியது
'குவான்ட் மியூச்சுவல் பண்டு' விவகாரத்தில் 'செபி' விசாரணை துவங்கியது
'குவான்ட் மியூச்சுவல் பண்டு' விவகாரத்தில் 'செபி' விசாரணை துவங்கியது
ADDED : ஜூன் 25, 2024 10:14 PM

புதுடில்லி : மியூச்சுவல் பண்டு முதலீட்டு நிறுவனமான 'குவான்ட் மியூச்சுவல் பண்டு' மீதான, சட்டவிரோத நடைமுறை குறித்த விசாரணையை 'செபி' துவங்கியுள்ளது. இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என குவான்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த குவான்ட் நிறுவனம், 80 லட்சத்துக்கும் அதிகமான மியூச்சுவல் பண்டு கணக்குகளையும்; 93,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களையும் நிர்வகித்து வருகிறது.
சமீபத்தில் தனது வழக்கமான ஆய்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, செபி இந்நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அப்போது, இந்நிறுவனத்தில் சந்தேகத்திற்குரிய விஷயங்களை, செபி கண்டறிந்துள்ளது.
பொதுவாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது மொத்தமாக தான் முதலீடு செய்யும்.
சில்லரை முதலீட்டாளர்களைப் போல குறைந்த எண்ணிக்கையிலான பங்குகளை அந்நிறுவனங்கள் வாங்காது.
எந்தெந்த பங்குகளை எப்போது, எவ்வளவு எண்ணிக்கையில் வாங்க வேண்டும் என, நிறுவனத்தில் பணியாற்றும் முக்கிய சில நபர்களுக்கு மட்டுமே தெரியும்.
இந்நிலையில், குவான்ட் நிறுவனம் முதலீடு செய்யவுள்ள தகவல்களை அறிந்த சிலர், இத்தகவலை பயன்படுத்தி, நிறுவனம் முதலீடு செய்வதற்கு முன்பே, தங்களது முதலீடுகளை மேற்கொண்டு, லாபம் ஈட்டியுள்ளதை, செபி கண்டுபிடித்துள்ளது.
அதாவது, நிறுவனம் ஒரு குறிப்பிட்ட பங்கில் அதிகளவில் முதலீடு செய்ய உள்ளது என்பதை அறிந்த சிலர், அந்த பங்கில் அதிக மதிப்பிலான தொகையை முன்கூட்டியே முதலீடு செய்து உள்ளனர்.
இதன் காரணமாக, அந்த பங்குகளின் விலை தற்காலிகமாக உயர்ந்துள்ளது. அடுத்த சில நாட்களிலேயே, குவான்ட் நிறுவனம் இப்பங்குகளை வாங்கும்போது அதிக விலை கொடுத்து வாங்கிஉள்ளது.
நிறுவனத்தின் முதலீட்டை தொடர்ந்து, பங்கு விலை மேலும் அதிகரிக்க, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இவர்கள் தங்களது பங்குகளை விற்று அதிக லாபம் ஈட்டிஉள்ளனர்.
நிறுவனத்தின் முதலீடு குறித்து தகவலறிந்தவர்களாலேயே இதைச் செய்திருக்க முடியும் என்பதால், குவான்ட் நிறுவன நிர்வாகிகளை செபி விசாரித்து வருகிறது. நிறுவனத்தின் மும்பை அலுவலகம் மற்றும் ஹைதராபாதில் உள்ள சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில், செபி அதன் விசாரணையை துவங்கியுள்ளது.
மேலும், நிறுவனம் முதலீடு செய்யப் பயன்படுத்தும் பங்கு தரகு நிறுவனத்தின் ஊழியர்களும் விசாரிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.