கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி; சரக்கு கட்டண உயர்வால் பாதிப்பு
கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி; சரக்கு கட்டண உயர்வால் பாதிப்பு
கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி; சரக்கு கட்டண உயர்வால் பாதிப்பு
ADDED : ஜூலை 12, 2024 12:07 AM

புதுடில்லி:சரக்கு கட்டண உயர்வால், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் பலர், நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாக, இத்துறை சார்ந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான கொள்முதல் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், சரக்கு கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன.
இதனால் சிறிய, நடுத்தர கடல் உணவு ஏற்றுமதியாளர்கள், நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக, இந்திய கடல் உணவு பொருள் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தேசிய தலைவர் பவன் குமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சுக்கு அனுப்புவதற்கான செலவு, ரூ.3.15 லட்சத்திலிருந்து, தற்போது ரூ.8.72 லட்சமாக உயர்ந்துள்ளது. நியூயார்க்குக்கு அனுப்புவதற்கான செலவு ரூ.3.74 லட்சத்திலிருந்து, ரூ.5.40 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஐரோப்பாவிற்கான கட்டணங்கள் ரூ.2.49 லட்சத்திலிருந்து ரூ.6.64 லட்சமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, உறைந்த கடல் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான முக்கியமான நேரம் இதுவாகும். இந்நிலை யில், குறுகிய காலத்திற்குள் சரக்கு கட்டணங்களை அபரிமிதமாக உயர்த்தியிருப்பது, இந்தியாவின் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நம் நாட்டின் கடல் உணவு பொருள் ஏற்றுமதி யில் 50 சதவீத வருவாய், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகிற-து. இக்கட்டண உயர்வு, ஆகஸ்ட் மாதத்தில் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
சில கப்பல் நிறுவனங்கள், சந்தை நிலவரத்தைப் பயன்படுத்தி, நிர்ணயித்ததைக் காட்டிலும், கன்டெய்னர்களுக்கு அதிக கட்டணங்களை விதிக்கின்றன. கப்பல் போக்குவரத்து துறை வாயிலாக அங்கீகரிக்கப்படாத சரக்கு கட்டண உயர்வை நிவர்த்தி செய்யக் கோரி, கப்பல் போக்குவரத்து இயக்குனரை ஏற்றுமதியாளர் சங்கம் சந்திக்க உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.