கோவையில் 'இன்டெக் 2024' கண்காட்சி இன்று துவக்கம்
கோவையில் 'இன்டெக் 2024' கண்காட்சி இன்று துவக்கம்
கோவையில் 'இன்டெக் 2024' கண்காட்சி இன்று துவக்கம்
ADDED : ஜூன் 06, 2024 02:33 AM

கோவை,:'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில், 20வது சர்வதேச இன்ஜினியரிங் தொழில் கண்காட்சியான, 'இன்டெக் 2024' இன்று துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது.
கொடிசியா சார்பில் நடக்கும் இந்த கண்காட்சியில், உள்ளூர் நிறுவனங்கள் முதல் உலகளாவிய நிறுவனங்கள் வரை இயந்திரங்களை காட்சிப்படுத்துகின்றன. இன்று காலை 11:00 மணியளவில் இதன் துவக்க விழா நடக்கிறது.
495 நிறுவனங்கள்
டி.வி.எஸ்., சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிர்வாக தலைவர் தினேஷ், விருந்தினராக பங்கேற்கிறார்.
தென் மண்டல இந்திய தொழில்கள் கூட்டமைப்பு தலைவர் நந்தினி துவக்கி வைக்கிறார். கண்காட்சியின் தலைவர்
ராமச்சந்திரன், கண்காட்சியின் நோக்கம் குறித்து விளக்குகிறார். கொடிசியா தலைவர் திருஞானம் முன்னிலை வகிக்கிறார்.
இக்கண்காட்சியில், 495 நிறுவனங்கள் காட்சி அரங்குகளை அமைத்துள்ளன. இயந்திரங்களின் நேரடி செயல் விளக்கங்கள் இடம் பெறுகின்றன. தைவான், சீனா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.
மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டில்லி, ஹரியானா, பஞ்சாப், உ.பி., தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இயந்திர, இன்ஜினியரிங் உற்பத்தி தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
விருதுகள்
இயந்திரங்களை பற்றியும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் கருத்தரங்குகள் நடக்கின்றன. சர்வதேச உற்பத்தியாளர்கள் கூட்டம், கருத்தரங்கும் நடக்கிறது. இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் 50,000 பார்வையாளர்கள் இதில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சிறந்த புதுமைப் படைப்புகளை உருவாக்கிய அரங்குகளுக்கு, வரும் 9ம் தேதி விருதுகள் வழங்கப்படுகின்றன.