பிளாட்பார்ம் டிக்கெட்டுக்கு விலக்கு ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு
பிளாட்பார்ம் டிக்கெட்டுக்கு விலக்கு ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு
பிளாட்பார்ம் டிக்கெட்டுக்கு விலக்கு ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு
ADDED : ஜூன் 23, 2024 01:00 AM

புதுடில்லி:ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 53வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், டில்லியில் நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக, பிரதமர் மோடி பொறுப்பேற்ற பின், நடைபெற்ற முதல் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இதுவாகும்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது:
ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட், பயணியர் காத்திருப்பு அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை ஆகிவற்றுக்கு, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
உருக்கு மற்றும் அலுமினிய பால் கேன்களுக்கும்; சோலார் குக்கர்களுக்கும் 12 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
அட்டைப் பெட்டிகள் மற்றும் தெளிப்பான்களுக்கும் 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைத்து, ஜி.எஸ்.டி., வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
மாணவர்களுக்கான கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளைத் தவிர, வெளியில் உள்ள பிற தங்கும் விடுதிகளில், ஒரு நபருக்கு மாதம் 20,000 ரூபாய்க்குள் கட்டணம் வசூலிக்கப்படும்பட்சத்தில், அதற்கு ஜி.எஸ்.டி., யிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
போலியான விலைப்பட்டியல்களை சமர்ப்பித்து, உள்ளீட்டு வரி பயன் கோருவதை தடுக்கும் நோக்கில், விரைவில் நாடு முழுதும், பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் பதிவு பயன்படுத்தப்பட உள்ளது
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு சதவீதத்தில் மாற்றங்கள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர் குழுவுக்கு தலைவராக, பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்
கடந்த 2017 - 18 முதல் 2019 - 20ம் நிதியாண்டுகள் வரை செலுத்த வேண்டிய வரியை, அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தும்பட்சத்தில், அவர்களுக்கு வட்டியுடன் கூடிய அபராதம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்
ஜி.எஸ்.டி., தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கான வரம்பாக, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு 20 லட்சம் ரூபாயும், உயர் நீதிமன்றத்திற்கு 1 கோடி ரூபாயும், உச்ச நீதிமன்றத்திற்கு 2 கோடி ரூபாயுமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யில் சேர்க்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். மாநில அரசுகளுடன் பேசி இதற்கான முடிவு எட்டப்படும்