பெண்களுக்கு வேலைவாய்ப்பு: நிறுவனங்களுடன் அரசு பேச்சு
பெண்களுக்கு வேலைவாய்ப்பு: நிறுவனங்களுடன் அரசு பேச்சு
பெண்களுக்கு வேலைவாய்ப்பு: நிறுவனங்களுடன் அரசு பேச்சு
ADDED : ஜூன் 14, 2024 01:52 AM

சென்னை:தமிழகத்தை சேர்ந்த பெண்களுக்கு, நல்ல சம்பளத்துடன், நேரடி வேலைவாய்ப்பு கிடைக்க என்னென்ன திறன்கள் தேவைப்படுகின்றன என்பது தொடர்பாக, 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' உள்ளிட்ட முன்னணி தொழில் நிறுவனங்களுடன், தமிழக வழிகாட்டி நிறுவனம் பேச்சு நடத்தியுள்ளது.
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்க, 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நேரடி வேலை வழங்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு, 10 சதவீதம் ஊதிய மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது.
இதனால் இவர்களுக்கு அதிக வேலை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அதற்கு ஏற்ப, பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன.
இதற்காக, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், முன்னணி நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், டாடா எலக்ட்ரானிக்ஸ், டைட்டன், அசோக் லேலண்ட், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு கூறியதாவது:
தமிழகத்தில் மின்சார வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிக நிறுவனங்கள் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில், புதிய நிறுவனங்களும் முதலீடு செய்ய உள்ளன. ஓசூரில், மின்சார வாகனங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
தொழில் நிறுவனங்களில் பணிபுரிய எந்த திறன் உடைய பணியாளர் தேவை என்ற விபரம் தெரிந்தால், அதற்கு ஏற்ப திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பெண்களுக்கு வழங்க உதவியாக இருக்கும்.
எனவே, தொழில் நிறுவனங்களில் பணிபுரிய, தற்போது என்னென்ன திறன்கள் தேவை, ஆள்சேர்ப்பு முறை உள்ளிட்டவை தொடர்பாக, நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்பட்டது. அதற்கு ஏற்ப பயிற்சி அளிக்கும்பட்சத்தில், அவர் களுக்கு எளிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.