இந்தியாவில் 'டெஸ்லா' எலான் மஸ்க் சூசகம்
இந்தியாவில் 'டெஸ்லா' எலான் மஸ்க் சூசகம்
இந்தியாவில் 'டெஸ்லா' எலான் மஸ்க் சூசகம்
ADDED : ஜூன் 09, 2024 02:49 AM

புதுடில்லி:மோடி பிரதமராக பதவி ஏற்பது குறித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார், 'டெஸ்லா' நிறுவன தலைவர் எலான் மஸ்க். கூடவே, இந்தியாவில் தனது நிறுவனங்கள் உற்சாகமான பணிகளைச் செய்ய ஆவலுடன் காத்திருப்பதாகவும், அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது, டெஸ்லா நிறுவனத் தின் தலைவர் எலான் மஸ்க்கை சந்தித்துப் பேசினார்.
அப்போது, மஸ்க் 2024ம் ஆண்டில் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக மோடியிடம் தெரிவித்துஇருந்தார்.
மேலும், இந்திய சந்தையில், டெஸ்லா நுழையும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்க்கின் இந்திய வருகையின் போது, டெஸ்லா மின் வாகன உற்பத்தி ஆலை மற்றும் விற்பனை பிரிவு உள்ளிட்டவற்றிற்கு, பல பில்லியன் டாலர்கள் முதலீட்டு திட்டங்களை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரது வருகை, பார்லி., தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்க உள்ள நிலையில், மஸ்க் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில், 'உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். இந்தியாவில் எனது நிறுவனங்கள் உற்சாகமாக பணிகளைத் துவங்க, ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, டெஸ்லா நிறுவனத்தின் இந்திய முதலீடுகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக தொழில்துறையினரால் கருதப்படுகிறது.