ஆட்சேர்ப்பு புகார் 'பாக்ஸ்கான்' விளக்கம்
ஆட்சேர்ப்பு புகார் 'பாக்ஸ்கான்' விளக்கம்
ஆட்சேர்ப்பு புகார் 'பாக்ஸ்கான்' விளக்கம்
ADDED : ஜூன் 28, 2024 02:25 AM

சென்னை:'பாக்ஸ்கான்' நிறுவன ஆட்சேர்ப்பில், திருமணமான பெண்கள் முழுமையாக தவிர்க்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அந்நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
'ஆப்பிள் ஐ போன்' தயாரிப்பாளரான பாக்ஸ்கான் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ளது. இந்த ஆலைக்கான ஆட்சேர்ப்பில், திருமணமான பெண்கள் முழுமையாக தவிர்க்கப்படுவதாக அண்மையில் புகார் எழுந்தது.
திருமணமான இந்திய பெண்களுக்கு வீட்டுப் பொறுப்புகள் அதிகரிப்பது, அவர்கள் அணியும் நகைகள் மற்றும் அணிகலன்கள், ஐ போன் உபகரணங்களை பழுதாக்குவது ஆகியவை, இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டன.
இந்த நிலையில், நிறுவனத்தின் மொத்த பெண் பணியாளர்களில், 70 சதவீதம் திருமணமான பெண்கள் எனவும், புதிய ஆட்சேர்ப்பில், 25 சதவீதம் எனவும் பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகள், இந்தியாவின் தயாரிப்பு துறைக்கு அவதுாறை ஏற்படுத்துவதாகவும், இவை நிறுவனத்தில் வேலை கிடைக்காத அல்லது, தற்போது பணிபுரியாத நபர்களால் பரப்பியிருக்கக்கூடும் என்றும் பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக, நகை அல்லது உலோகங்களை அணிந்த எவரும், நிறுவன வளாகத்திற்குள் பணி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை எனவும், இது பல தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.