ஜி.எஸ்.டி., நிலுவை செலுத்த நோட்டீஸ் சமரச திட்டம் கோரும் நிறுவனங்கள்
ஜி.எஸ்.டி., நிலுவை செலுத்த நோட்டீஸ் சமரச திட்டம் கோரும் நிறுவனங்கள்
ஜி.எஸ்.டி., நிலுவை செலுத்த நோட்டீஸ் சமரச திட்டம் கோரும் நிறுவனங்கள்
ADDED : ஜூன் 21, 2024 11:37 PM

சென்னை:ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளுக்கு உள்ள நிலுவையை, வட்டி மற்றும் அபராதத்துடன் செலுத்தக் கோரி, சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தொழில்முனைவோர்கள், ஜி.எஸ்.டி.,க்கு தனி சமரச திட்டத்தை அறிவித்து, நிலுவையை வசூலிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
இது குறித்து, தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் மோகன் கூறியதாவது:
மத்திய அரசு, 2017 ஜூலையில் ஜி.எஸ்.டி., வரி விதிப்பை அமல்படுத்தியது. அதில், ஆரம்பத்தில் பல குளறுபடிகள் இருந்தன. அதை சரிசெய்யத் தெரியாமல் அதிகாரிகளும் சிரமப்பட்டனர்.
பல தொழில்முனைவோர்களுக்கும் வரி செலுத்தும் நடைமுறை அப்போது தெரியவில்லை. இதனால், சிலர் நிலுவை வைத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், 2017 லிருந்து முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஜி.எஸ்.டி., நிலுவை இருப்பதாகவும், அதற்கு வட்டி மற்றும் அபராதம் என, மொத்த தொகையையும் செலுத்துமாறு, தற்போது வணிக வரி துறையின் ஜி.எஸ்.டி., பிரிவில் இருந்து தொழில் நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது.
ஏற்கனவே, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பல நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால், அதிகமாகவுள்ள நிலுவை தொகையை செலுத்த முடியவில்லை.
அதை செலுத்தாத நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன. இதனால், தொழில் நிறுவனங்கள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, அரசு ஜி.எஸ்.டி., வரி நிலுவை தொடர்பாக, சமரச திட்டத்தை அறிவித்து வசூலிக்க வேண்டும்.
இதனால், தொழில் நிறுவனங்களும் பயன் பெறும். அரசுக்கும் வரி வருவாய் கிடைப்பதில் பிரச்னை இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.