செய்யூரில் 800 ஏக்கரில் தொழில் பூங்கா முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
செய்யூரில் 800 ஏக்கரில் தொழில் பூங்கா முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
செய்யூரில் 800 ஏக்கரில் தொழில் பூங்கா முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : மார் 12, 2025 01:40 AM

சென்னை:''செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், செய்யூரில், 800 ஏக்கர் பரப்பளவில், புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்,'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் நடந்த அரசு விழாவில், அவர் பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், மகேந்திரா, விப்ரோ, பி.எம்.டபிள்யூ., பிளக்ஸ்ட்ரானிக்ஸ், பாக்ஸ்கான், டெல், சாம்சங், இன்போசிஸ், டி.வி.எஸ்., சீமென்ஸ், நிஸான், போர்டு, அப்பல்லோ டயர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தொழில் துவங்கி உள்ளன.
அதனால் தான் தொழில் வளர்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டம் சிறந்து விளங்குகிறது; முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில், செங்கல்பட்டு மாவட்டத்தை வளர்த்தெடுக்க ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடிக்கல் நாட்டிய ஒரே ஆண்டில் பணிகளை முடித்து, கோத்ரேஜ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை துவங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், செய்யூரில் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
கடந்த மூன்று ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் தனியார் முதலீட்டு திட்டங்கள் வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதற்கு ஆட்சியின் மீதான நம்பிக்கை தான் காரணம்.
சில தடைகள் மட்டும் இல்லையென்றால், தமிழகத்தின் வளர்ச்சி இன்னும் வேகமாக இருந்திருக்கும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.