'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி கொடிசியாவில் துவங்கியது
'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி கொடிசியாவில் துவங்கியது
'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி கொடிசியாவில் துவங்கியது
ADDED : ஜூலை 12, 2024 12:39 AM

கோவை: கோவை கொடிசியாவில், 'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி நேற்று துவங்கியது. புதிய தொழில்நுட்பங்கள், நவீன உபகரணங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டன.
கோவை கொடிசியா சார்பில், 'அக்ரி இன்டெக்ஸ்' என்ற 22வது வேளாண் கண்காட்சி, தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது. வரும் 15ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது.
முன்னதாக, 'டி' ஹால் அரங்கில் நடந்த துவக்க விழாவில், கண்காட்சி குறித்த சிறப்பு கையேடை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தலைவர் ஹிமான்ஷு பதக்.
வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, பண்ணாரி அம்மன் குழுமங்கள் தலைவர் பாலசுப்ரமணியம், 'அக்ரி இன்டெக்ஸ்' தலைவர் தினேஷ்குமார், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கொடிசியா செயலர் யுவராஜ், அக்ரி இன்டெக்ஸ் துணை தலைவர் ஸ்ரீஹரி ஆகியோர் வெளியிட்டனர்.
அடுத்த 20 ஆண்டுகளில்...
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தலைவர் ஹிமான்ஷு பதக் பேசுகையில், “வேளாண்மையில் புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இது, அடுத்து வரும் 20 ஆண்டுகளில் வேளாண் உபகரணம், தொழில்நுட்பம், விற்பனை என பல்வேறு அம்சங்களில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
“விவசாயிகள், இதுபோன்ற விஷயங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த கண்காட்சி, விவசாயிகளுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும்,” என்றார்.
சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளில் மேற்கொள்ளும் தொழில்நுட்பங்கள், விவசாய பயன்பாட்டுக்கான உபகரணங்கள், உழவுக்கு பயன்படுத்தப்படும் நவீன டிராக்டர்கள், அறுவடைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
490 நிறுவனங்கள்
தானியங்களில் கசடு இல்லாமல் தரம் பிரிக்கும் இயந்திரங்கள், கால்நடை தீவன இயந்திரங்கள், 30 நிமிடங்களில் 100 ஏக்கரில் மருந்து தெளிக்கும் ட்ரோன் உட்பட பல்வேறு சாதனங்களும் இடம் பெற்றிருந்தன.
தமிழகம், ஆந்திரா, குஜராத், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து வேளாண் உபகரண தயாரிப்பாளர்கள், தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். சிங்கப்பூர், மலேஷியா, இத்தாலி, தென்கொரியா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து பங்கேற் பாளர்கள் பங்கேற்றனர்.
முன்னுாறுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டதில், 490 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கண்காட்சியின் முதல் நாளான நேற்று, திரளான விவசாயிகள், பார்வையாளர்கள் வந்திருந்தனர். காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கண்காட்சி நடக்கும் நிலையில், ஜூலை 15ம் தேதி, பிற்பகல் 2 மணிக்கு மேல் மாணவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.