கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி 3 சதவீதம் வளர்ச்சி
கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி 3 சதவீதம் வளர்ச்சி
கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி 3 சதவீதம் வளர்ச்சி
ADDED : ஜூன் 20, 2024 01:23 AM

புதுடில்லி : இந்தியாவின் கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில் மூன்று சதவீத வளர்ச்சியையும், மதிப்பின் அடிப்படையில் 8 சதவீத சரிவையும் சந்தித்துள்ளதாக, வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி சந்தைகளான, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு சவால்களை சந்தித்த போதிலும், கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியானது, அளவின் அடிப்படையில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
அளவு அடிப்படையிலான ஏற்றுமதி, கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் 17.35 லட்சம் டன்னில் இருந்து, கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் 17.82 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், மதிப்பின் அடிப்படையில், 2022 - 23ல் 66,400 கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 61,254 கோடி ரூபாயாக குறைந்தது.
கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில், 40,504 கோடி ரூபாயுடன், உறைந்த இறால் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மொத்த ஏற்றுமதி அளவில் 40.19 சதவீதத்தையும், மதிப்பில் 66.12 சதவீதத்தையும் இது கொண்டுள்ளது.
கடல் உணவு ஏற்றுமதியில், உறைந்த மீன்கள் இரண்டாவது பெரிய ஏற்றுமதி பொருளாக இருந்தது.
கடந்த நிதியாண்டில் இந்திய கடல் உணவுகளின் முக்கிய இறக்குமதியாளராக, மதிப்பின் அடிப்படையில் தொடர்ந்து அமெரிக்கா முன்னிலையில் உள்ளது.