நடப்பாண்டில் ரூ.1.16 லட்சம் கோடி குவியும் அன்னிய முதலீடு
நடப்பாண்டில் ரூ.1.16 லட்சம் கோடி குவியும் அன்னிய முதலீடு
நடப்பாண்டில் ரூ.1.16 லட்சம் கோடி குவியும் அன்னிய முதலீடு
ADDED : ஜூலை 09, 2024 07:03 AM

புதுடில்லி : அன்னிய முதலீட்டாளர்கள், நடப்பு ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும், இந்திய பங்குகளில் 7,900 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இதையடுத்து, நடப்பாண்டில், இந்திய பங்குகளில், அன்னிய முதலீட்டாளர்கள் மேற்கொண்ட முதலீட்டின் மதிப்பு, 1.16 லட்சம் கோடி ரூபாயை எட்டிஉள்ளது.
வலுவான சூழல்
இதுமட்டுமல்லாமல், கடந்த ஜூனில், நம் நாட்டின் கடன் பத்திரங்களில் 6,304 கோடி ரூபாய் அளவுக்கு மேற்கொண்டு உள்ளனர். நடப்பு நிதியாண்டில், நம் நாட்டு கடன் பத்திரங்களில், அன்னிய முதலீட்டாளர்கள் இதுவரை 74,928 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இதுகுறித்து, முதலீட்டு ஆய்வாளர்கள் தெரிவித்ததாவது: கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், தேர்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்களால், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளிலிருந்து குறிப்பிடத்தக்க முதலீட்டை திரும்ப பெற்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டதால், 26,565 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, வலுவான பொருளாதார சூழல் மற்றும் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி ஆகியவற்றால் உந்தப்பட்டு, நடப்பு ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 7,962 கோடி ரூபாய் முதலீடு செய்துஉள்ளனர்.
வெளிப்புற காரணிகள்
இம்மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் மற்றும் நிறுவனங்களின் முதல் காலாண்டு முடிவுகள் உள்ளிட்டவையே, இனி வரும் காலங்களில் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகளை தீர்மானிக்கும்.
அன்னிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்ப பெறுவதில், உள்நாட்டு காரணிகளை விட, அமெரிக்க கடன் பத்திர வருவாய் அதிகரிப்பு உள்ளிட்ட வெளிப்புற காரணிகளே முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலை மாறும்போது, அவர்கள் மீண்டும் இந்திய பங்குகளை வாங்கத் துவங்குகின்றனர். இவ்வாறு தெரிவித்தனர்.