Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ கிரெடிட் ஸ்கோர் மூலம் வங்கிகள் தெரிந்து கொள்ளும் அம்சங்கள்

கிரெடிட் ஸ்கோர் மூலம் வங்கிகள் தெரிந்து கொள்ளும் அம்சங்கள்

கிரெடிட் ஸ்கோர் மூலம் வங்கிகள் தெரிந்து கொள்ளும் அம்சங்கள்

கிரெடிட் ஸ்கோர் மூலம் வங்கிகள் தெரிந்து கொள்ளும் அம்சங்கள்

ADDED : மே 25, 2025 06:28 PM


Google News
Latest Tamil News
கடனுக்கு விண்ணப்பிக்கும் போது கிரெடிட் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் தகுதியை குறிக்க பயன்படுத்தப்படும் இந்த எண்ணிக்கையை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்க தீர்மானிக்கும் பல அம்சங்களில் முக்கியமாக அமைகிறது.

கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருப்பது நல்லது என்றும், இதற்கான வழிகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. கடன் கிடைப்பதை எளிதாக்குவதோடு, வட்டிவிகிதம் உள்ளிட்டவற்றிலும் இது தாக்கம் செலுத்துகிறது. கிரெடிட் ஸ்கோர் மூலம் வங்கிகள் தெரிந்து கொள்ளும் அம்சங்களை பார்க்கலாம்.

கடன் தகுதி:


கடன் வழங்கும் போது, கிரெடிட் கார்டு வழங்கும் போது, விண்ணப்பிப்பவரின் கடன் தகுதியையும், கடனை திரும்ப செலுத்தும் தன்மையையும் கிரெடிட் ஸ்கோர் மூலம் வங்கிகள் பரிசீலிக்கின்றன. கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், கடனை திரும்ப செலுத்துவதில் உள்ள இடர் குறைவு என்றும் பொருள்.

வட்டி விகிதம்:


உங்களுடைய கிரெடிட் ஸ்கோர், கடனுக்கான வட்டி விகிதத்தை தீர்மானிப்பதில் நேரடியாக தாக்கம் செலுத்து கிறது. அதிக கிரெடிட் ஸ்கோர் உள்ளவருக்கு எளிதாக கடன் கிடைக்கும்; வட்டி விகிதமும் சாதகமாக அமையும். ஒட்டு மொத்த கடன் செலவை குறைக்கும்.

கடன் வரம்பு:


கடன் தொகையை தீர்மானிப்பதிலும் கிரெடிட் ஸ்கோர் முக்கியமாகிறது. ஒருவருக்கு எந்த அளவு கடன் கொடுத்தால் இடர் இல்லாதது என்பதை இதன் அடிப்படையில் வங்கிகள் தீர்மானிக்கின்றன. கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருப்பது பாதுகாப்பை உணர்த்துவதால், கடன் தொகையும் அதிகமாக இருக்கும்.

நிபந்தனைகள்:


கடனுக்கான விதிமுறைகள், நிபந்தனைகள் உண்டு. இவற்றிலும், கடனுக்கான கால அளவிலும் கிரெடிட் ஸ்கோர் தாக்கம் செலுத்துகிறது. திரும்ப செலுத்தும் காலத்தில் சலுகை, விதிமுறையில் மேம்பட்ட அம்சங்களை வங்கிகள் அதிக கிரெடிட் ஸ்கோர் உள்ளவருக்கு வழங்க முன்வரலாம்.

கூடுதல் சலுகைகள்:


வங்கிகள் பல்வேறு கூடுதல் சலுகைகளையும், மேம்பட்ட வசதிகளையும் வழங்கலாம். இவற்றை பெறுவதையும் கிரெடிட் ஸ்கோர் பங்கு வகிக்கிறது. கடன் வரலாறு சீராக இருந்தால் எளிதாக கடன் கிடைப்பதோடு, கூடுதல் பலன்கள், சலுகைகளும் சாத்தியமாகும். இந்த காரணங்களால் கிரெடிட் ஸ்கோர் பராமரிப்பு முக்கியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us