Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/முதிர்வடையும் முதலீட்டை மறுமுதலீடு செய்வது ஏற்றதா?

முதிர்வடையும் முதலீட்டை மறுமுதலீடு செய்வது ஏற்றதா?

முதிர்வடையும் முதலீட்டை மறுமுதலீடு செய்வது ஏற்றதா?

முதிர்வடையும் முதலீட்டை மறுமுதலீடு செய்வது ஏற்றதா?

ADDED : பிப் 12, 2024 01:16 AM


Google News
Latest Tamil News
முதலீடு முதிர்வடையும் போது அந்த தொகையை விலக்கிக் கொள்வதா அல்லது மீண்டும் முதலீடு செய்வதா என்பதை சரியாக தீர்மானிக்க வேண்டும்.

நாம் மேற்கொள்ளும் முதலீடுகள் பல்வேறு காலகட்டத்தில் முதிர்வடையும் தன்மை கொண்டுள்ளன. பொதுவாக, முதலீடு முதிர்வடையும் போது, அந்த தொகையை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனினும் சில நேரங்களில் முதலீடு தொகையை என்ன செய்வது எனத் தெரியாத நிலை இருக்கலாம். பல நேரங்களில், முதிர்வடையும் தொகையை விலக்கிக் கொண்டால் அது கண்ணுக்குத் தெரியாமல் செலவாகி விடலாம்.

இது போன்ற தருணங்களில் மறுமுதலீடு செய்வது, அதிக பலன் தருவதாக அமையும். எனினும், முதலீட்டை விலக்கிக் கொள்வதா அல்லது மீண்டும் முதலீடு செய்வதா என்பதை நன்றாக யோசித்து தீர்மானிக்க வேண்டும். வைப்பு நிதி, பங்கு முதலீடு, பத்திரங்கள் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.

நிதி இலக்குகள்


முதலீடுகள் குறுகிய மற்றும் நீண்ட கால நோக்கிலானவை. முதலீடு வாய்ப்பை தீர்மானிக்கும் போது, நிதி இலக்குகளை முதன்மை யாக கருத வேண்டும். எனவே, நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டை தொடர்வதா என தீர்மானிக்கலாம். அதோடு தற்போதைய நிதி சூழலையும் பரிசீலிக்க வேண்டும்.

உடனடி பலன் தேவையா அல்லது நீண்ட கால செல்வம் தேவையா என யோசித்து அதற்கேற்ப தீர்மானிக்க வேண்டும். சந்தை நிலை, வட்டி விகித சூழல் போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வைப்பு நிதி அல்லது பத்திரங்கள் எனில், வட்டி விகித போக்கிற்கு ஏற்ப மீண்டும் முதலீடு செய்வது அதிக பலன் தருமா என முடிவு செய்யலாம். அதே போல, ஒருவரது இடர் தன்மை மற்றும் வரி அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிக இடரும், அதிக பலனும் கொண்ட முதலீடு ஏற்றதா அல்லது பாதுகாப்பான அணுகுமுறை தேவையா என பரிசீலிக்க வேண்டும். அதே போல, முதலீட்டை விலக்கிக் கொள்வதன் வருமான வரி தாக்கத்தையும் கவனிக்க வேண்டும். மறு முதலீடு வரி சேமிப்பையும் அளிக்குமா என்பதையும் பார்க்க வேண்டும். நிதி இலக்கை அடைய உதவுமா என்பதை முக்கியமாக கருத வேண்டும்.

தேவை என்ன?


முதலீட்டை விலக்கிக் கொள்வது எனில் அதற்கான பயனை தீர்மானிக்க வேண்டும். முதலீட்டிற் கான இலக்கு நிறைவேறிவிட்டது எனில், மற்ற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட இலக்குகளுக்காக செய்யப்பட்ட முதலீடு எனில் அதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அவசரகால நிதி மற்றும் கடன் பொறுப்புகளையும் பரிசீலிக்க வேண்டும். அவசர கால நிதி போதுமானதாக இல்லை எனில், முதலீடு தொகையை அதற்கு ஏற்ற படி பொருத்தமான நிதி சாதனங்களில் மறுமுதலீடு செய்யலாம்.

கடன்கள் இருந்தால், குறிப்பாக அதிக வட்டி கடன் இருந்தால் அவற்றை அடைப்பது பொருத்தமாக இருக்கும். வீட்டுக்கடன் இருந்தால், அசலில் ஒரு பகுதியை முன்னதாக செலுத்துவது பற்றி யோசிக்கலாம்.

முதிர்வு தொகை கையில் கிடைத்து, உடனடியாக அதன் மீது முடிவெடுக்க இயலவில்லை எனில், இடைப்பட்ட காலத்திற்கு பொருத்தமான குறுகிய கால முதலீட்டை நாடலாம். ஆக, முதலீடு உத்தியை தீர்மானிப்பது போலவே, முதிர்வடையும் முதலீட்டை என்ன செய்வது என்பதையும் நன்கு ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us