/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ஆயிரம் சந்தேகங்கள்: இன்றைய இளையோருக்கான முதலீட்டு திட்டம்ஆயிரம் சந்தேகங்கள்: இன்றைய இளையோருக்கான முதலீட்டு திட்டம்
ஆயிரம் சந்தேகங்கள்: இன்றைய இளையோருக்கான முதலீட்டு திட்டம்
ஆயிரம் சந்தேகங்கள்: இன்றைய இளையோருக்கான முதலீட்டு திட்டம்
ஆயிரம் சந்தேகங்கள்: இன்றைய இளையோருக்கான முதலீட்டு திட்டம்
ADDED : பிப் 12, 2024 01:28 AM

வீட்டுக் கடனில் கூடுதலாக ஒரு இ.எம்.ஐ., கட்டினால், நாம் கட்ட வேண்டிய அசல் மற்றும் வட்டியில் கணிசமான அளவு குறையும் என்றும், இ.எம்.ஐ., கட்டும் ஆண்டும் குறையும் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வருகிறதே, அது உண்மையா? உண்மை யெனில் அது எவ்வாறு குறைகிறது?
இரா.சண்முகசுந்தரம்,
அவிநாசி, திருப்பூர்
இ.எம்.ஐ., என்றால் சமமாக பிரிக்கப்பட்ட மாதாந்திர தவணைத் தொகை என்று அர்த்தம். நீங்கள் வீட்டுக் கடனாக, ஒரு குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் வாங்குகிறீர்கள்.
இந்த இ.எம்.ஐ.,யில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று, அசல், மற்றொன்று வட்டி. கடனுடைய ஆரம்ப காலத்தில் வட்டி பகுதி அதிகமாகவும், அசல் பகுதி குறைவாகவும் இருக்கும். இந்த நிலை படிப்படியாக மாறி, ஒரு கட்டத்தில் வட்டி குறைவாகவும், அசல் தொகை அதிகமாகவும் ஆகும்.
நீங்கள் கூடுதலாக ஒருசில இ.எம்.ஐ.,களையோ, அலுவலகத்தில் கிடைக்கும் போனஸ் உள்ளிட்ட மொத்த ரொக்கத்தையோ கடனுக்கு ஈடாகச் செலுத்துவீர்களானால், அப்போது அசல் தொகையில் கழிக்கப்படும். 15 ஆண்டு கால கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அடுத்த 10 மாதத்தில் 1 லட்சம் 'பார்ட் ப்ரீ பேமென்ட்' செய்துவிட்டீர்கள் என்றால், இப்போது அசல் தொகையே கணிசமாக குறைந்துவிடும் அல்லவா? அப்போது, இ.எம்.ஐ., தொகை மாறாது. ஆனால், இ.எம்.ஐ., கட்டும் காலம் குறைந்துவிடும்.
என் மகன் ஐ.டி., கம்பெனியில் மூன்று ஆண்டுகளாக சென்னையில் பணிபுரிகிறார். அவர் வாடகை குடியிருப்பில் பேச்சுலராக வசிக்கிறார். அவரது மாதச் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கலாமா? வீட்டுத் தவணை முடிந்த பின் வீடு சொந்தமாகிவிடும். இது நல்ல யோசனையா, தவறான முடிவா? வீட்டுத் தவணையை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நான் என் சம்பளத்தில் இருந்து செலுத்துவது சிறப்பானதா? மகன் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் வகையில் தவணை தொகை செலுத்துவது சிறப்பானதா?
ஆர்.கதிரவன், தேனி
வீடு வாங்குவதே சிறப்பான முடிவில்லை என்பது என் முடிவு. இருக்கட்டும். உங்கள் மகனை வாழ்நாள் கடன்காரராக ஆக்க முயற்சி செய்கிறீர்கள், வாழ்த்துகள். அவர் பெயரிலேயே கடன் வாங்கட்டும். உங்களை விட உங்கள் மகனுக்கு இளம் வயது என்பதால், கூடுதல் காலத்துக்கு கூடுதல் தொகை கடனாக கிடைக்கும்.
வேண்டுமானால், நீங்கள் 'கோ அப்ளிகன்டாக' சேருங்கள். இரண்டு பேருடைய மாத வருவாயையும் சேர்த்துக் காண்பிக்கும் போது, இன்னும் கூடுதல் தொகை கடனாக கிடைக்கும். வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நல்ல கட்டுமான இன்ஜினியரை கலந்தாலோசியுங்கள்.
நான் சென்னையில் 22,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து வருகிறேன். சிபில் 715 உள்ளது. நான் தனிநபர் கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தேன். அவர்கள், 'அப்ளிகேஷன் ஸ்கோர்' குறைவாக உள்ளது என என் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். அப்ளிகேஷன் ஸ்கோர் என்றால் என்ன? விபரம் தெரியுங்கள்.
பி.பிரியா, பல்லாவரம், சென்னை
சிபில் ஸ்கோர் அல்லது அது போன்ற ஸ்கோர்களை பார்ப்பதற்கு முன்னதாக, வங்கிகளே வாடிக்கையாளர்கள் தரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் சில முடிவுகளை எடுக்க முடியும்.
அவரது மொத்த சம்பளம், இதர வருவாய், ஏற்கனவே வாங்கியுள்ள கடன்கள், இதர கடன்கள் அல்லது கமிட்மென்ட்கள் உள்ளிட்டவற்றை விண்ணப்பத்திலேயே பதிவு செய்யச் சொல்வர். விண்ணப்பத்தை வைத்து, உங்களிடம் கேள்விகள் எழுப்பும் போது, கூடுதல் விபரங்களை சேகரித்துக்கொள்வர்.
அதன் அடிப்படையில் ஒரு விண்ணப்பத்தை ஏற்பதா, வேண்டாமா என்பதற்கான மதிப்பீடு தான் 'அப்ளிகேஷன் ஸ்கோர்' என்பது. வங்கி அளவில் நடைபெறும் வடிகட்டல் இது. இதில் தேர்வு செய்யப்பட்டால் தான், அடுத்த கட்டத்துக்கே நகர முடியும்.
என் மகன் பெங்களூரு கம்பெனியில் வேலை பார்க்கிறார். வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளார். தற்போது இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுப் பணிக்காக சென்று விட்டார். அங்கு வெளிநாட்டுப் பணம் சம்பாதிக்கிறார். இந்த இரண்டு ஆண்டுகளுக்கு, இந்தியாவில் அவர் எவ்வாறு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்?
எஸ்.கண்ணுசாமி, சேலம்
வருமான வரி கட்ட வேண்டுமா, வேண்டாமா என்பதை அவர் இந்தியாவில் எத்தனை நாட்கள் இருந்தார் என்பதை பொறுத்து அமையும். கடந்த ஓராண்டில் 182 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால், அவர் இந்தியாவில் தங்கியவராக கருதப்படுவார்.
அதனால், அவரது வருவாய்க்கு வருமான வரி கட்ட வேண்டும். ஒருவேளை அதற்கு குறைவாக தங்கியிருந்தார் என்றால், அவர் 'என்.ஆர்.ஐ.,' ஆக கருதப்படுவார். அவரது வெளிநாட்டு வருவாய்க்கு அவர் இந்தியாவில் வரி செலுத்த வேண்டாம். எந்த நாட்டில் சம்பாதித்தாரோ, அந்த நாட்டின் சட்டப்படி வரி கட்டவேண்டும்.
ஆனால், அவர் பெயரில் இந்தியாவில் இருக்கும் சொத்துக்களில் இருந்து சேரும் வருவாய்க்கு வருமான வரி கட்ட வேண்டும்.
உதாரணமாக, வீட்டு வாடகை, வங்கி கணக்குகளில் இருந்து கிடைக்கும் வட்டி, இந்திய பங்குகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து கிடைக்கும் மூலதன ஆதாயம் உள்ளிட்டவற்றுக்கு அவர் வரி கட்ட வேண்டும். நல்ல ஆடிட்டரை போய் பாருங்கள். இந்த விஷயத்தில் அவர் வழிகாட்டுவார்.
வருமான வரியை தவிர்க்க தனி 'பான்' எண் எடுத்து மனைவி, மகன், மகள் பெயரில் பங்குகள் வாங்கினால், கணவனுக்கு வருமான வரி பிரச்னை வருமா? மனைவி குடும்பத்தலைவி, வேறு வருமானம் கிடையாது.
எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை
உங்கள் மனைவி, குழந்தைகள் பெயரில் நீங்கள் முதலீடு செய்தால், அதில் இருந்து கிடைக்கும் வருவாய், லாபம் ஆகியவை உங்களுடைய வருவாயோடு சேர்க்கப்படும். இதற்கு 'கிளப்பிங்' என்று பெயர். ஒட்டுமொத்தமாக கணக்கீடு செய்யப்பட்டு, வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்.
மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கும் தொடக்கநிலை இளைஞர்களுக்கு, இளைஞி களுக்கான சேமிப்பு, முதலீடு திட்டம் என்ன?
எஸ்.ஸ்ரீதர், தாராவி, மும்பை
ஏதேனும் ஒரு சிறு தொகையை, வங்கியில் ஆர்.டி., போட்டு ஆரம்பிப்பது நல்லது. ஓரிரு ஆண்டுகளில், பணம் குட்டி போடுவதைபார்க்கும் போது நம்பிக்கை பிறக்கும். பணத்தை பன்மடங்கு பெருக்க முடியும் என்பது வெறும் கருத்து அல்ல, அது நடைமுறை உண்மை தான் என்பது புரிவதற்கு ஆர்.டி., நல்ல துவக்கம்.
அதன் பிறகு, வாழ்க்கையில் இலக்குகளையும், அதற்கான காலத்தையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப மியூச்சுவல் பண்டுகளில் எஸ்.ஐ.பி., போட ஆரம்பிக்கலாம்.
இலக்கை நோக்கிய பயணத்தில், பணம் படிப்படியாக சேருவதைப் பார்க்கும்போது நிம்மதி ஏற்படும். காம்பவுண்டிங் என்ற கருத்து மனதில் ஆழமாக பதிய வேண்டும். அது போதும். அது தான் ஆரம்பம். அதன் பின், அவர் வாழ்க்கை முழுக்க சேமிப்பாளராக, முதலீட்டாளராக மாறிவிடுவார்.-----
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
ph:98410 53881