/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/முதிர்வடையும் வைப்பு நிதி மறுமுதலீடு செய்வது ஏற்றதா?முதிர்வடையும் வைப்பு நிதி மறுமுதலீடு செய்வது ஏற்றதா?
முதிர்வடையும் வைப்பு நிதி மறுமுதலீடு செய்வது ஏற்றதா?
முதிர்வடையும் வைப்பு நிதி மறுமுதலீடு செய்வது ஏற்றதா?
முதிர்வடையும் வைப்பு நிதி மறுமுதலீடு செய்வது ஏற்றதா?
ADDED : ஜூன் 10, 2024 01:16 AM

வைப்பு நிதி முதிர்வடையும் போது முதலீட்டை எப்படி கையாள்வது என்பதை நிதி இலக்குகள் அடிப்படையில் தீர்மானிப்பது நல்லது.
வைப்பு நிதி முதலீடு என்று வரும் போது முதலீடு காலம், வட்டி விகிதம் போன்ற அம்சங்கள் மட்டும் அல்ல, முதிர்வடையும் போது கிடைக்கும் தொகையை என்ன செய்வது எனும் கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது.
முதிர்வடையும் தொகையை விலக்கிக் கொள்ளலாம் அல்லது மறுமுதலீடு செய்யலாம் என்றாலும், இது தொடர்பாக தேர்வு செய்வது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். மேலும் வைப்பு நிதி முதலீட்டின் மூலம் மேம்பட்ட பலனை பெற முதலீடு உத்தி சிறப்பாக அமைவதும் அவசியம்.
நிதி இலக்கு
வைப்பு நிதி முதிர்வடையும் போது, தொகையை விலக்கிக் கொள்ளும் முடிவை மேற்கொள்வது ஒருவரின் நிதி இலக்கின் அடிப்படையில் அமைய வேண்டும். முதிர்வடையும் காலத்தில் முக்கிய பணத்தேவை இருந்தால், முதலீட்டை விலக்கிக் கொள்ளலாம்.
இதன் வாயிலாக நிதித்தேவையை சமாளிப்பதோடு, எஞ்சிய தொகையை மற்ற வழிகளிலும் முதலீடு செய்யலாம். குறுகிய கால நோக்கத்தில் முதலீடு செய்திருந்தால் இவ்வாறு முடிவு எடுப்பது எளிதானது.
எனினும் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்திருந்தால், இந்த முடிவு பொருத்தமானதா என்பதை பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்.
உடனடி பணத்தேவை இல்லை எனில் முதலீட்டை தொடர்வதே சரியான உத்தியாக இருக்கும். பெரும்பாலான வங்கிகள் வைப்புநிதிகள் முதிர்வு காலத்தில் தானாக புதுப்பிக்கப்படும் வாய்ப்பை அளிக்கின்றன. எனினும், மறுமுதலீடு செய்யும் போது வட்டி விகிதம் முக்கிய அம்சமாக விளங்குவதை மனதில் கொள்ள வேண்டும்.
அதிக வட்டி விகிதத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு கூடுதல் பலனை அளிக்கும். எனவே வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வட்டி விகிதம் ஏறுமுகத்தில் இருக்கும் நிலையில் சிக்கல் இல்லை.
இதர அம்சங்கள்
வட்டி விகித சூழலுக்கு ஏற்ப பயன் பெறும் வகையில் பல்வேறு கால அளவுகளில் முதலீடு செய்யும் ஏணிப்படி உத்தியையும் பின்பற்றலாம். வட்டி விகிதம் குறைவாக இருக்கும் போது, முதலீட்டை விலக்கிக் கொண்டு அசலை வேறு விதங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை பரிசீலிக்கலாம்.
எனினும், தொகையை விலக்குவதாக இருந்தாலும், மறு முதலீடு செய்வதாக இருந்தாலும், வரி விதிப்பு உள்ளிட்ட இதர அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வைப்பு நிதி வாயிலாக கிடைக்கும் வட்டி வருமானம் வரி விதிப்புக்கு உட்பட்டது. எனவே, முடிவெடுக்கும் முன், வரி தாக்கத்தை கணக்கிட வேண்டும்.
பொதுவாக, வைப்பு நிதி முதலீடு மிகவும் பாதுகாப்பனது என்றாலும், அதன் பலன் சமபங்கு முதலீடு போன்ற மற்ற நிதி வாய்ப்புகளை விட குறைவாக இருக்கிறது. எனவே, அதிக பலன் நாடுபவர்கள் மறுமுதலீடு செய்யும் போது, கூடுதல் வட்டி அளிக்கும் வர்த்தக வைப்பு நிதி போன்றவற்றை பரிசீலிக்கலாம்.
ஆனால், ஒருவரது இடர்தன்மை இதில் முக்கிய பங்கு வகிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நிதிச் சூழலுக்கு ஏற்ப மாற்று முதலீடு வாய்ப்புகளையும் பரிசீலிக்கலாம். தொடர்ந்து முதலீடு செய்வது நல்ல பலனை அளிக்கும் என சொல்லப்படும் நிதி கோட்பாட்டை வழிகாட்டியாக வைத்து செயல்படலாம்.