/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு 8வது முறையாகவும் நிறைவேறவில்லை வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு 8வது முறையாகவும் நிறைவேறவில்லை
வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு 8வது முறையாகவும் நிறைவேறவில்லை
வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு 8வது முறையாகவும் நிறைவேறவில்லை
வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு 8வது முறையாகவும் நிறைவேறவில்லை
ADDED : ஜூன் 08, 2024 01:16 AM

மும்பை:வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவற்றை வாங்கியவர்கள், வாங்க இருப்பவர்கள் இம்முறையாவது ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை குறைக்குமா என எதிர்பார்த்த நிலையில், 8வது முறையாகவும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான 'ரெப்போ' வட்டி விகிதத்தில், எந்த மாற்றமும் இன்றி 6.50 சதவீதமாகவே தொடரும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மும்பையில் கடந்த 5ம் தேதி துவங்கி, மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம், நேற்றுடன் நிறைவடைந்தது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்கினார்.
அவர் தெரிவித்தவற்றில் முக்கியமானவை:
ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.50 சதவீதமாகவே தொடரும்
நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு, முன்பு தெரிவிக்கப்பட்ட 7 சதவீதத்திலிருந்து 7.20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது
நடப்பு நிதியாண்டில், பணவீக்கம் 4.50 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பணவீக்கம் குறைந்து வரும் நிலையில், உணவு பிரிவு பணவீக்கத்தால் ஒட்டுமொத்த பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது
உணவுப் பிரிவில் தொடர்ந்து அதிகரித்து காணப்படும் பணவீக்கம், மற்ற பிரிவுகளில் குறைந்துள்ள பணவீக்கத்தை உணரவிடாமல் செய்கிறது
பருவமழை, வழக்கத்தை விட கூடுதலாக பதிவாகும் என்ற கணிப்பு மெய்யாகும் பட்சத்தில், அது உணவு பணவீக்கத்தை குறைக்க உதவும்
பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கொண்டுவருவதையே, ரிசர்வ் வங்கி இலக்காக கொண்டு இயங்கி வருகிறது
பணவீக்கம் நான்கு சதவீதத்துக்கு கீழ் வந்து, அதே நிலையில் நீடிக்கும்பட்சத்தில், அதன் பின் வட்டி விகிதத்தை குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்
உள்நாட்டில் தங்கத்தை சேமித்து வைக்க போதுமான திறன் உள்ளதாலேயே, சமீபத்தில் பிரிட்டனிலிருந்து 100 டன் தங்கம் திருப்பிக் கொண்டு வரப்பட்டன. இதற்கு வேறு எந்த காரணங்களும் இல்லை.
இவ்வாறு தெரிவித்தார்.