/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாம்ராஜ் நகரில் புலி தாக்கி பெண் பலி 2 மணி நேரத்தில் பிடித்த வனத்துறை சாம்ராஜ் நகரில் புலி தாக்கி பெண் பலி 2 மணி நேரத்தில் பிடித்த வனத்துறை
சாம்ராஜ் நகரில் புலி தாக்கி பெண் பலி 2 மணி நேரத்தில் பிடித்த வனத்துறை
சாம்ராஜ் நகரில் புலி தாக்கி பெண் பலி 2 மணி நேரத்தில் பிடித்த வனத்துறை
சாம்ராஜ் நகரில் புலி தாக்கி பெண் பலி 2 மணி நேரத்தில் பிடித்த வனத்துறை
ADDED : ஜூன் 11, 2025 01:01 AM

சாம்ராஜ் நகர் : பெண்ணை கொன்று, நபரை காயப்படுத்திய புலியை 2 மணி நேரத்திற்குள் வனத்துறையினர் பிடித்தனர்.
சாம்ராஜ் நகர் மாவட்டம், பெடகுள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவி, 35. நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதைக்காக வெளியே வந்தார். அப்போது, புதரில் மறைந்திருந்த புலி, அவர் மீது பாய்ந்து கடித்தது.
அதிர்ச்சியடைந்த ரவி, உதவி கேட்டு கூச்சலிட்டார். இதை கேட்ட அப்பகுதியில் இருந்த கிராமத்தினர், சத்தம் எழுப்பி, புலியை விரட்டினர். படுகாயம் அடைந்த ரவி, சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரவியின் தாய் கூறுகையில், ''நேற்று முன்தினம் இரவு, உறவினர் வீட்டுக்கு ரவி சென்றிருந்தார். இரவு இயற்கை உபாதைக்காக சென்றபோது புலி அவரை தாக்கியது. அவரின் கூச்சல் சத்தத்தை கேட்ட உறவினர்கள், கூச்சலிட்டு புலியை விரட்டினர். இந்த புலி, ஒரு மாதமாக இப்பகுதியில் சுற்றி வருகிறது,'' என்றார்.
இதற்கிடையில், நேற்று அதிகாலை ரங்கம்மா, 50, வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புலி, அவரின் தலையை கடித்து, வயிற்றை கடித்து குதறியதில் உயிரிழந்தார். வெளியே சென்றவர் வரவில்லை என்று உறவினர்கள் தேடி சென்றபோது, புலி தாக்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக பிலிகிரி ரங்கநாதசுவாமி புலிகள் வனப்பகுதி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக புலியை பிடிக்க, 'பீமா', 'கஜேந்திரா' ஆகிய இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. புலியை தேடும் பணியை துவக்கி இரண்டு மணி நேரத்தில், வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது:
புலி தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்தேன். ரங்கம்மாவை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோன்று ரவி என்பவரும் தாக்கப்பட்டு உள்ளார். ஆபத்தான நிலையை கடந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
மனித ரத்தத்தை ருசித்த புலியை, வெளியே நடமாட விடுவது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, புலியை பிடிக்க உத்தரவிட்டிருந்தேன்.
வனப்பகுதி அருகில் வசிக்கும் மக்கள், அதிகாலை, மாலை நேரங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.