/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அடுத்த மேல்சபை தலைவர் ஹரிபிரசாத்தா, போஸ்ராஜுவா? அடுத்த மேல்சபை தலைவர் ஹரிபிரசாத்தா, போஸ்ராஜுவா?
அடுத்த மேல்சபை தலைவர் ஹரிபிரசாத்தா, போஸ்ராஜுவா?
அடுத்த மேல்சபை தலைவர் ஹரிபிரசாத்தா, போஸ்ராஜுவா?
அடுத்த மேல்சபை தலைவர் ஹரிபிரசாத்தா, போஸ்ராஜுவா?
ADDED : செப் 10, 2025 02:03 AM

கர்நாடக மேல்சபையில் பெரும்பான்மை பெற்றிருப்பதால், மேல்சபை தலைவராக அமைச்சர் போஸ்ராஜு அல்லது ஹரிபிரசாத்தை நியமிக்க காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் பா.ஜ., - ம.ஜ.த., ஆதரவுடன் மேல்சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டி உள்ளார். இந்தாண்டு இறுதியில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதை மனதில் வைத்து, தனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் எதிர்பார்த்துள்ளார்.
மாநிலத்தில் கட்சி ஆட்சியை பிடித்தபோது தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால், முதல்வருக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை தெரிவித்திருந்தார்.
எனவே, இம்முறை அமைச்சரவை மாற்றி அமைக்கும்பட்சத்தில், ஹரிபிரசாத்துக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதுடன், போஸ்ராஜுக்கு, மேல்சபை தலைவர் பதவி வழங்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளையில், அமைச்சர் போஸ்ராஜுக்கும் கட்சி மேலிடத்தில் செல்வாக்கு உள்ளது. அவர் அமைச்சராக தொடர்வதில் ஆர்வம் உள்ளதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
ஒருவேளை மேல்சபை தலைவர், துணைத் தலைவரை மாற்ற வேண்டும் என்றால், சட்டசபை - மேல்சபை கூட்டத்தொடர் நடக்க வேண்டும். கடந்த மாதம் கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. இனி அடுத்த கூட்டத்தொடர், பெலகாவியில் தான் நடக்கும். அதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன.
'என் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் தகவல் கிடைத்த அடுத்த கனமே, என் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்' என, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி பல முறை தெளிவுபடுத்தி உள்ளார்.
இதற்கு முன்பு, மேல்சபை தலைவராக இருந்த சங்கரமூர்த்திக்கு எதிராக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால், இந்த தீர்மானம் வெற்றி பெற வில்லை.
எனவே, மேல்சபையின் மூத்த உறுப்பினரான பசவராஜ் ஹொரட்டி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வாய்ப்பில்லை. காங்கிரஸ் அரசுக்கு இருக்கும் ஒரே வழி, அவரை ராஜினாமா செய்ய வைத்து, புதிய தலைவரை நியமிப்பது தான்.
காலியாக இருந்த நான்கு நியமன உறுப்பினர்களை கடந்த 7ம் தேதி, காங்கிரஸ் அரசு நியமித்தது. இதன்மூலம், கர்நாடக மேல்சபையில் அக்கட்சியின் பலம் 37ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக மேல்சபையில் தற்போது காங்கிரஸ் 37, பா.ஜ., 29, ம.ஜ.த., 7, சுயேச்சை 1, மேலவை தலைவர் 1 என மொத்தம் 75 இடங்கள்.
தலைவர் பதவியை பெற மெஜாரிட்டிக்கு 38 பேரின் ஆதரவு தேவைப்படும். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு 36 பேர் உள்ளனர். காங்கிரசுக்கு 37 பேர் உள்ளனர். சுயேச்சையாக லக்கன் ஜார்கிஹோளி உள்ளார். ஒருவேளை இவர், பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்தால், இரு கட்சிகளும் சரிசமமாக இருப்பர்.
இந்நேரத்தில் தலைவராக இருப்பவர், தன் ஓட்டை, எந்த கட்சிக்கு செலுத்துகிறாரோ, அவரே அடுத்த தலைவராக தேர்வு செய்யப்படுவார். ஆனால், இதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
ஏனெனில், லக்கன் ஜார்கிஹோளி சுயேச்சையாக இருந்தாலும், தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என்றே காங்கிரஸ் தலைவர்கள் நம்புகின்றனர். இதன் மூலம், தலைவர் பதவியை கைப்பற்ற முடியும் என, அவர்கள் கணக்கு போடுகின்றனர்.
- நமது நிருபர் -