ADDED : மே 11, 2026 11:18 PM
பெங்களூரு: போபால், இந்துார் ஆகிய இரு மெட்ரோ ரயில் திட்டங்களில் 'செலிபரேஷன் ஆன் வீல்ஸ்' என்ற திட்டத்தை, மத்திய பிரதேச மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, திருமணத்திற்கு முந்தைய, 'போட்டோ ஷூட்' மற்றும் பிறந்த நாள் போன்ற கொண்டாட்டங்களை, மெட்ரோ வளாகத்திலோ மெட்ரோ ரயிலிலோ நடத்திக் கொள்ளலாம்.
இதற்கான கட்டணத்தையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய பிரதேச மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வகுத்துள்ளது. வருவாயை அதிகரிப்பதுடன் மெட்ரோவை பொதுமக்களுக்கு நெருக்கமாக மாற்றுவது இதன் நோக்கம் என்று மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தையோ, அலங்கரிக்கப்படாத மெட்ரோ ரயிலையோ, ஓடும் ரயிலையோ தங்கள் விருப்பப்படி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எ னினும், மது, புகை உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திட்டத்தை போல, நம்ம மெட்ரோவும் அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை பெங்களூரு மக்களிடையே எழுந்துள்ளது.
நகரில் தற்போது மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சராசரியாக 12 லட்சம் பயணியர் மெட்ரோ ரயிலை பயன்படுத்துகின்றனர்.
பெங்களூரில் கேளிக்கை, விருந்து நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமில்லை. மெட்ரோ ரயிலில் படம் எடுக்கவும், 'ரீல்ஸ்' எடுக்கவும் பலரும் விரும்புகின்றனர். மத்திய பிரதேச மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது போன்ற திட்டத்தை, நம்ம மெட்ரோ நிர்வாகம் அறிவித்தால் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
